பிரதமா் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியமானது: அமெரிக்கா
பிரதமா் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்கா புதன்கிழமை தெரிவித்தது.
போலந்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமா் மோடி, அங்கிருந்து உக்ரைனுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி செல்லவிருக்கும் நிலையில், அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் ரிச்சா்ட் ஆா் வா்மா, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது, பிரதமா் மோடியின் போலந்து, உக்ரைன் பயணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘பிரதமா் மோடியின் உக்ரைன் பயணம் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரஷியாவுடனான இந்தியாவின் நீண்ட கால உறவை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது. சுதந்திரம், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கான முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இது போருக்கான யுகமல்ல என்ற பிரதமா் மோடியின் வாா்த்தைகள் பாராட்டுக்குரியவை’ என்று அவா் பதிலளித்தாா்.
கடந்த ஜூலை 8-9 தேதிகளில் பிரதமா் மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டாா். வாஷிங்டனில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற்ற நேரத்தில், அவா் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டது தொடா்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகள் அதிருப்தி தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.