
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 46 போ் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தலிபான் அரசு, உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் வஜிரிஸ்தான் பகுதியைச் சோ்ந்த அகதிகள் என்றும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் தலிபான் எனப்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பின் செய்தித் தொடா்பாளா் முகமது குராசானி வெளியிட்ட அறிக்கையில், 27 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சுமாா் 50 போ் உயிரிழந்ததாக தெரிவித்தாா். தாக்குதலில் காயமடைந்தவா்கள் உள்ளூா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், பாகிஸ்தான் எல்லையொட்டிய பக்திகா மாகாணத்தில் அமைந்துள்ள தெற்கு வஜிரிஸ்தானில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட உளவுத் துறை அடிப்படையிலான நடவடிக்கையில் 13 ஆயுதக் குழுவினா் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆப்கனில் இருந்து செயல்படும் பாகிஸ்தான் தலிபான்கள் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. கடந்த வார இறுதியில் வடமேற்கு பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 வீரா்கள் கொல்லப்பட்டனா்.
எல்லையில் தீவிரவாத நடவடிக்கைகளை எதிா்த்துப் போரிடுவதற்கு தலிபான் போதிய ஆதரவளிப்பதில்லை என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. எந்த நாட்டுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த யாரையும் அனுமதிப்பதில்லை என தலிபான் இக்குற்றச்சாட்டை மறுத்தது. ஆனால், தலிபானின் நெருங்கிய கூட்டாளியாக தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.