ஆப்கானிஸ்தானில் உள்ள வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல்கள் வைப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் இருந்து நேட்டோ படைகள் கடந்த 2021 இல் வெளியேறிய பிறகு தலிபான் படைகள் ஆட்சியைக் கைப்பற்றியது.
முன்பை போன்ற ஆட்சி முறை தற்போது இருக்காது என்றும், பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தெரிவித்திருந்தனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கும், பணி புரிவதற்கும் தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டனர். பெண்களுக்கான பேச்சு சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிதாக வீடு கட்டுபவர்கள் பெண்கள் அதிகம் புழங்கும் சமையல் அறை, வீட்டின் முற்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் வைக்க தடை விதித்துள்ளனர்.
மேலும், ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள வீடுகளில் குறிப்பிட்ட இடங்களில் ஜன்னல்கள் இருந்தால் சுவர் எழுப்பவும் அல்லது மறைக்கவும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அண்டை வீட்டின் கிணற்றுப் பகுதி தெரியும் வகையில் இருக்கும் ஜன்னல்களையும் அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.
இதன்மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும், தேவையில்லாத பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல்வேறு வகையில் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.