பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - இந்துக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை..!

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இந்துக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - இந்துக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை..!


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  

பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று இம்ரான் கான் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு இம்ரான் கான் அரசுக்கு எதிராக  நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது. 

எதிர்வரும் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இம்முறை  இம்ரான் கானின் பிடிஐ கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முத்தாஹிதா குவாமி இயக்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இதன் காரணமாக ஆங்காங்கே தேர்தல் பிரசாரத்தின்போது மோதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.மேலும் பல சுயேட்சைகளும் தேர்தலில் களம் காணுவதால் போட்டி கடுமையாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இந்துக்களுக்கு போதுமான பிரதிநித்துவம் அளிக்கப்படவில்லை என மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அந்நாட்டு அரசமைப்பின்படி,  நாடாளுமன்றத்தில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்துக்காக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தங்களுக்கான போதுமான பிரதிநிதித்துவம் இன்னும் அளிக்கப்படவில்லை என இந்துக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.  பலருக்கு வாக்காளர்களாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் வெறும் 2.14 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாக சிந்து மாகாணம் உள்ளது.   

பாகிஸ்தானில் உள்ள ஒட்டுமொத்த இந்துக்கள் மக்கள்தொகை 4.77 மில்லியன் ஆக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அதில் 1.777 மில்லியன் மக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்துக்களுக்கு அடுத்தபடி, அதிகமாக வாழும் சிறுபான்மையின பிரிவினரான கிறிஸ்தவர்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 1.639 மில்லியன் பேர் மட்டுமே வாக்காளர்களக உள்ளனர். சீக்கியர்களில் மொத்தம் 8,833 பேர் மட்டுமே வாக்காளர்களாக பதுவு செய்யப்பட்டு உள்ளனர். 

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 105.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 3.626 மில்லியன் வாக்காளர்கள் சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, கடந்த 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.77 மில்லியன் ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 4..43 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதில் இந்து வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக இந்து சமூக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்து சமூகத்தில் உள்ள சாதியப் பாகுபாடுகளால், தாழ்த்தப்பட்ட சாதியினராக கருதப்படும் மக்கள், அதிலும் குறிப்பாக தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்,  இந்துக்களில் பணக்கார தொழிலதிபர்கள், பெரும் வியாபாரிகளாக உள்ளவர்கள் மட்டுமே அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதாகவும், வேதனை தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், மக்கள்தொகை அடிப்படையில், சிறுபான்மையினருக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கான இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com