
மத்திய காஸா பகுதியில் உள்ள குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனிய மருத்துவ வட்டாரங்கள் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் நேற்று கூறியதாவது, இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காஸா பகுதியில் உள்ள நுசிராத், அல்-ஜவைடா மற்றும் டெய்ர் எல்-பலாஹ் ஆகிய பகுதிகளில் பல வீடுகள் மீது தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களை நடத்தின. இந்த சம்பவத்தில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்தன.
40 உடல்களை சிவில் பாதுகாப்புக் குழு மீட்டுள்ளது. டஜன் கணக்கானோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கினர். மேலும் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் டெய்ர் எல்-பலாஹ் நகரில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 28,858 ஆக உயர்ந்துள்ளதாக காஸா பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை கொடூரமாக படுகொலை செய்தனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்திவருகிறது. குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக பொதுமக்கள் வடக்கு பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவை ஏற்று தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாக ராஃபா நகரம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.