ஜப்பானில் விமான விபத்து: பயணிகள் உயிர்தப்பியது எப்படி?

ஜப்பானின் டோக்யோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் இன்று ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
ஜப்பானில் விமான விபத்து | AP
ஜப்பானில் விமான விபத்து | AP


டோக்யோ: ஜப்பானின் டோக்யோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் இன்று ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

நல்வாய்ப்பாக, ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், தீ முழுமையாக பற்றுவதற்குள், அதிலிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆனால், இந்த விபத்தில், ஜப்பானின் கடலோரக் காவல்படை விமானத்தின் விமானி மட்டும் வெளியே குதித்து உயிர் தப்பியதாகவும், அதில் இருந்த 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் ஊடகம் வெளியிட்ட விடியோவில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், டோக்யோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி, பெரும் தீப்பிழம்பு ஏற்படுகிறது. அதன்பிறகு, அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிகிறது.

ஷின் சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து வந்த ஏர்பஸ் வகை விமானமானது, ஹனேடாவுக்கு வந்த போது, ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த கடலோரக் காவல்படையின் சிறிய விமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய சிறிது நேரத்தில், பயணிகள் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிவதும் பதிவாகியிருக்கிறது.

கடலோரக் காவல்படை விமானத்துடன் பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானதை, கடலோரக் காவல்படை செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.

ஜப்பானில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நின்றிருந்த கடலோரக் காவல்படை விமானம் மீது மோதியதும் பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனடியாக விமானத்தில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து பயணிகள் விமானத்தில் இருந்த 17 வயது இளைஞர் அன்டோன் டெய்பே கூறுகையில், ஒரு வினாடியில் எங்கள் பகுதியில் புகை சூழ்ந்துகொண்டது. உடனடியாக நாங்கள் தரையில் படுத்துக்கொண்டோம். அவசரகாலக் கதவு திறக்கப்பட்டதும், உடனடியாக நாங்கள் வெளியே குதித்து உயிர் தப்பினோம் என்கிறார்.

எங்கள் விமானத்துக்குள் சூழ்ந்த புகை, ஒரு நரகத்தைப் போல இருந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. எல்லோரும் ஓடிய திசையில் ஓடினோம். இது மிகக் கொடுமையாக இருந்தது என்கிறார் டெய்பே. இவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் இந்த விமானத்தில் பயணித்திருந்தார்.

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிகாடாவுக்கு ஹனேடாவிலிருந்து நிவாரணப் பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்லத் தயாராக இருந்த கடலோரக் காவல்படை விமானத்தின் மீதுதான் இந்த பயணிகள் விமானம் மோதியிருக்கிறது.

ஹனேடா விமான நிலையம், ஜப்பானில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் விமான நிலையமாகும். பலரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு இன்று இந்த விமான நிலையத்தில் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில், புத்தாண்டு பிறப்பன்று பயங்கர நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது, அந்நாட்டு மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com