ஈயத்துடன் ஆப்பிள்சாஸில் கலந்திருக்கும் மற்றுமொரு நச்சுப்பொருள்

ஏலக்காய் ஆப்பிள் சாஸில் ஈயத்துடன், கூடுதலாக நச்சுப்பொருள்கள் கலந்திருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள்சாஸ் | AP
ஆப்பிள்சாஸ் | AP


நூற்றுக்கணக்கான அமெரிக்க குழந்தைகளால் விரும்பி உண்ணப்படும் ஏலக்காய் ஆப்பிள் சாஸில் ஈயத்துடன், கூடுதலாக நச்சுப்பொருள்கள் கலந்திருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏலக்காய் ஆப்பிள் சாஸில், ஒருபக்கம் ஈயம் கலந்திருக்கும் நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், மிக அதிக அளவில் ரசாயனப் பொருள்களான குரோமியம் கலந்திருப்பதாகவும், இது மிக மோசமான நச்சுப்பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானபானா ஆப்பிள் ஏலக்காய் பழக்கூழின் மாதிரிகள், ஈக்குவாடார் தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.

அமெரிக்க நோயியல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபரில், நடந்த ஆய்வில், 37 மாகாணங்களில் விற்பனைக்கு இருந்த ஆப்பிள் சாஸில் அதிகப்படியான ஈயம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகப்படியான ஈயம் கலந்த இந்த சாஸை சாப்பிட்டு, ஒரு நபருக்கு ரத்தத்தில் அதிகப்படியான ஈயம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இந்த ஆப்பிள்சாஸில், எந்த வகையான குரோமியம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொதுவாக, மனிதர்கள் சாப்பிடும் உணவில் இயற்கையாக குரோமியம் கலந்திருக்கும். அதாவது, குரோமியம் 3 என்பது உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தும் கூட. ஆனால், அதே குரோமியம் 4 வகையானது புற்றுநோயை உருவாக்கும்.

தொழிற்சாலையில் எடுத்த மாதிரியில் காணப்படும் ஈயம்-குரோமியம் விகிதமானது லீட் குரோமேட்டுடன் ஒத்துப்போகிறது, இது சில மசாலாப் பொருட்களில் கலந்திருப்பதால் அது நச்சாக மாறியதாக முன்னர் அறிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அளவானது, மிக மோசமான நச்சு என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

தற்போது விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட ஆப்பிள் சாஸ் பைகளை, முன்னதாக வாங்கி உட்கொண்ட எவரும் ஒரு மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.  அதிலிருந்த ஈய அளவானது பாதுகாப்பான நிலை அல்ல என்றும் வலியுறுத்தியது.

இந்த வானபானா நிறுவனத் தயாரிப்புகள் இன்னமும் ஆன்லைன் விற்பனையில் கிடைக்கலாம், அல்லது நீண்ட நாள்கள் பயன்பாட்டுக் காலம் கொண்டிருப்பதால், பலரது வீடுகளில் இன்னமும் பயன்பாட்டில் இருக்கலாம். எனவே, வீட்டில் வாங்கி வைத்திருந்தாலும் அதனை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com