'விமானத்தை வெடிக்க வைக்கப்போகிறேன்', நகைச்சுவை செய்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை!

விமானத்தை வெடிக்க வைக்கப்போகிறேன் என நண்பர்களுக்கு நகைச்சுவையாக குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞருக்கு, 80 லட்சம் அபராதம் விதிக்க ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 
'விமானத்தை வெடிக்க வைக்கப்போகிறேன்', நகைச்சுவை செய்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை!


விமான பயணத்தின்போது விமானத்தை வெடிக்க வைக்கப்போவதாக நண்பர்களுக்கு நகைச்சுவையாக புகைப்படம் ஒன்றினை அனுப்பிய இந்திய வம்சாவழி இளைஞர் மீது ஸ்பெயினில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை 2022-ல் பிரிட்டனைச் சேர்ந்த ஆதித்யா வர்மா எனும் இந்திய வம்சாவழி இளைஞர் நண்பர்களுடன் ஸ்பெயினுக்குச் சென்றுகொண்டிருந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக ஸ்னாப் சாட்டில் (Snap chat) ஒரு புகைப்படம் எடுத்து அதில்  'விமானத்தை வெடிக்க வைக்கப் போகிறேன். நான் ஒரு தாலிபான்' என எழுதி அனுப்பியுள்ளார். 

பிரிட்டன் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்த இந்த குறுஞ்செய்தி ஸ்பெயின் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ஸ்பெயினின் எஃப்-18 ரக விமானம் ஒன்று, வர்மாவின் விமானத்தை தரையிறங்கும்வரை பின்தொடர்ந்துள்ளது.

மெனோர்காவில் விமானம் தரையிறங்கியபின் விமானம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. 2022-ல் 18 வயதான வர்மா கைது செய்யப்பட்டு இரண்டு நாள்கள் காவலில் வைக்கப்பட்டார். தற்போது அவர் ஸ்பெயினில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.  

அவருக்கு சிறை தண்டனைகள் வழங்கப்படாது எனினும், ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகம் 85.94 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ளது. ஆனால் 20 லட்சம் வரை அவருக்கு அபராதம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாள்களில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பேசிய வர்மா, 'அது என் நண்பர்களுக்கு நான் அனுப்பிய படம். பள்ளியில் நண்பர்கள் எனது தோற்றத்தை கிண்டல் செய்யும் விதமாக என்னை தாலிபான் என அழைப்பார்கள். அதனால் நகைச்சுவையாக என் நண்பர்களுக்கு மட்டும் அப்படி அனுப்பினேன்' எனத் தெரிவித்துள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com