ஜோர்டனில் அமெரிக்க படைகள் மீது தாக்குதல்: தக்க பதிலடி கொடுப்போம் - ஜோ பைடன்
வாஷிங்டன் : இஸ்ரேல், இராக், பாலஸ்தீனம், சிரியா மற்றும் சௌதி அரேபியாவை எல்லைகளாக கொண்டுள்ள ஜோர்டனில் அமெரிக்கா ராணுவ தளவாடத்தை அமைத்துள்ளது. ஏறத்தாழ 3,000 அமெரிக்க வீரர்கள் அங்கே முகாமிட்டுள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாத படைகள் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.
இந்நிலையில், ஜோர்டனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள் மீது நேற்று(ஜன.28) ஈரான் ஆதரவு பயங்கரவாத படைகள் வான்வழி டிரோன் தாக்குதல் நடத்தியதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த தாக்குதலில், ஜோர்டனில் இருந்த மிகப்பெரிய ராணுவ தளவாடம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக பயங்கரவாத படைகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் நிகழ்த்தும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.. இந்நிலையில் தாக்குதல் நிகழ்த்தியவர்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து கிழக்கு சிரியாவில் முகாமிட்டிருந்த ஈரான் ஆதரவு பயங்கரவாத படைகள் பல அங்கிருந்து வெளியேறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபுறம், காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் தொடங்கியதிலிருந்து, இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாத படைகள் பல முறை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், முதன் முறையாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதும், அதில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதனிடையே, செங்கடல் பகுதியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஹௌதி பிரிவினைவாதிகள், தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக இராக், சிரியா மற்றும் ஏமனில் உள்ள பயங்கரவாத படைகளை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.