உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனநிலை என்ன?

உக்ரைனில் வாழும் மக்களின் மனநிலை என்ன என்பதை கண்டறிய அங்குள்ள மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் | கோப்புப்படம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் | கோப்புப்படம்

கீவ் : அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான உறவை உக்ரைன் கடைபிடிப்பதையும் நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைய விரும்புவதையும் ரஷியா தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த மோதல் போக்கு தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீதான ராணுவ தாக்குதல்களை ரஷியா திடீரென அறிவித்தது.

இதனையடுத்து, உக்ரைனில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் சூழலில், உக்ரைனிலுருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ரஷியவை எதிர்த்து போரிட, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் வாழும் மக்களின் மனநிலை என்ன? என்பதை கண்டறிய அங்குள்ள மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது.தேசிய ஜனநாயக நிறுவனத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் இம்மாதம்  26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொலைபேசி அழைப்புகள் மூலம்  கருத்துகள் கேட்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  

சர்வே முடிவுகளின் படி, நான்கில் ஒருவர் மீண்டும் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப ஏக்கத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

முன்பு ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த உக்ரைன் பிராந்தியங்களில் வாழும் மக்களிடையே, தேசப்பற்று அதிகரித்து காணப்படுவதையும் இந்த கருத்துக் கேட்பின் மூலம் அறிய முடிகிறது. அதே வேளையில், அமைதியற்ற மனநிலையில் அவர்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வே முடிவுகளில் கீழ்காணும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

போர் ஆரம்பித்ததிலிருந்து மக்களின் மனநலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.   தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களை  இழந்து தவிப்பதாக சர்வேயில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட மக்கள்  தெரிவித்துள்ளனர்.

மக்கள் எப்போதும் பாதுகாப்பு அறைகளுக்குள் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற பதட்டமான மனநிலையில் இருப்பதால் அவர்களின் மனநலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போரால் நிம்மதியான உறக்கமின்றி தவிப்பதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். குடும்பங்களை பிரிந்து தவித்து வரும் மக்கள், வேலை மற்றும் வருவாய் இழப்பு, உடல்நலக்குறைவு என பல்வேறு பிற பிரச்னைகளையும் எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் உக்ரைன் அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தியுள்ளனர். எனினும் தற்போது நடைபெறும் போர், மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்ற மனநிலையே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட்டால், அதன்பின் உக்ரைனில் நிலவக்கூடிய சமூகச் சூழல் என்பது, மக்கள் உடல்நலன் மற்றும் மனநலக் குறைபாடுகளுடன் வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com