
பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சா்வேட்டிவ் கட்சி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தற்போது தொழிலாளர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
2024 பிரிட்டன் பொதுத் தோ்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தோல்வியடைந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக், கியெர் ஸ்டார்மருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வெளியான தேர்தல் முடிவுகளின்படி, தொழிலாளர் கட்சி 407 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரிட்டன் பொதுத் தோ்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றிபெற்றாலே போதும் என்ற நிலையில், தொழிலாளர் கட்சி 400க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
பொதுத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்றும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்றும் ஏற்கனவே கருத்துக் கணிப்புகள் கூறியிருந்த நிலையில், அது உண்மையாகியிருக்கிறது.
பிரிட்டனின் புதிய அரசை தோ்வு செய்வதற்காக நடந்த இத்தோ்தலில், உள்ளூா் நேரப்படி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமாா் 4.6 கோடி வாக்காளா்களுக்காக 40,000 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சீட்டு முறையில் தோ்தல் நடைபெற்றது.
வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வாக்குச் சீட்டுகளை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) ஒட்டுமொத்த பலம் 650 என்ற நிலையில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை. 2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில்தான் அமலுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்ஸிட்) பிறகு நடைபெறும் முதல் பொதுத் தோ்தல் இது.
அதிகாரப்பூர்வமாக வெளியான தேர்தல் முடிவு
கன்சர்வேட்டிவ் கட்சி - 112
தொழிலாளர் கட்சி - 407
ஸ்காட்டிஷ் தேசியவாதக் கட்சி - 8
லிபரல் டெமாக்ரட்ஸ் - 58
மறுமலர்ச்சி பிரிட்டன் - 4
இதர - 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.