

பிரிட்டன் பொதுத் தோ்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 4) வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தத் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4 ஆவது இடத்தைப் பெற்றார்.
யார் இந்தத் தமிழ்ப் பெண் உமா குமரன்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் எம்பி ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். லண்டனில் பிறந்து வளர்ந்த அவர், அங்கேயே படித்து அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு முதல் 2009 வரையில் சுகாதார மற்றும் பராமரிப்பு நிறுவனங்களுக்கான பணியாளர் வல்லுநர்களுக்காக பணியாற்றினார்.
2009 ஆம் ஆண்டு முதல் 2010 வரை தொழிலாளர்கள் கட்சி எம்பி டான் பட்லரின் நாடாளுமன்ற ஆராய்ச்சியாளராகவும், வழக்கறிஞராகவும் இருந்தார்.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 வரை இஸ்லிங்டன் கவுன்சிலில் தொழிலாளர் குழுவில் பணியாற்றினார்.
பின்னர் அவர் 2017 நவம்பர் முதல் 2020 ஆகஸ்ட் வரை லண்டன் மேயர் சாதிக் கானின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார்.
2020 முதல் 2022 வரை தொழிலாளர் தலைவர் கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராக உமா குமரன் இருந்தார்.
2022 முதல் 2024 வரை C40 நகரங்களின் காலநிலை தலைமைக் குழுவிற்கான இராஜதந்திர, சர்வதேச உறவுகளின் இயக்குநராக இருந்தார்.
கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராக இருந்து தற்போது அவரது தலைமையின்கீழ் எம்பியாக உமா குமரன் பணியாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.