.jpg?rect=0%2C69%2C8467%2C4763&w=480&auto=format%2Ccompress&fit=max)
பிரிட்டன் தேர்தலில் 14 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து அந்த கட்சியின் தலைவர் கியெர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்க மன்னரை சந்திக்க பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்றுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் உடனான அரச சந்திப்பு முறையாக நிறைவுற்றால் மட்டுமே கியெர் ஸ்டார்மர் பிரிட்டனின் பிரதமராக- புதிய அரசை அமைக்க முடியும்.
மன்னராட்சியிலிருந்து ஆளும் அதிகாரம் தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு மாற்றப்பட்டாலும் அதிகாரம் கொடுக்கும் உரிமை இன்னமும் மன்னரிடமே உள்ளது என்பதற்கான அரங்கேற்ற நிகழ்வாக பிரதமர்- மன்னர் சந்திப்பு பார்க்கப்படுகிறது.
இதே நிகழ்வில் ஆட்சியில் இருந்து நீங்கும் முந்தைய பிரதமரை மன்னர் சந்தித்து விடை கொடுப்பதும் புதிதாக பொறுப்பேற்கவுள்ள பிரதமரை சந்திப்பதும் நடக்கும்.
பிரிட்டன் அரசியலமைப்பில் மன்னரின் அதிகாரம் சட்டத்தாலும் பராம்பரியத்தாலும் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடக்கிற நிகழ்வுகள் கடந்த காலத்தின் பிரதிபலிப்பு மட்டுமே எனக் கூறப்படுகிறது.
அரசு நடத்துவதற்கான உரிமையை மன்னரிடமிருந்து கை குலுக்குவதன் மூலம் புதிதாக பொறுப்பேற்கும் பிரதமர் பெற்றுக்கொள்வார். இந்த நிகழ்வு கைகளுக்கு முத்தமிடுதல் (கிஸ்ஸிங் ஹேண்ட்ஸ்) என அழைக்கப்படுகிறது. பாரம்பரியமான நிகழ்வு என்பதால் அப்போது புகைப்படம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அரசே கவிழ்ந்தாலும் மன்னர் ஆளுகை நிலையாக இருக்கும் என்பதற்கான குறியீடாக இத்தகைய நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
ராணி எலிசபெத்தின் 70 ஆண்டுகால ஆளுகையில் 15 பிரதம அமைச்சர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். தற்போதைய மன்னர் சார்லஸ் ஆளுகையில் மூன்றாவது பிரதமராக கியெர் ஸ்டார்மர் பொறுப்பேற்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.