
சீனாவில் 100-க்கும் மேற்பட்ட உயிருடனிருந்த பாம்புகளைக் காற்சட்டைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கிலிருந்து எல்லை நகரமான ஷென்சென் பகுதிக்கு செல்ல முயன்ற அந்த நபர் டேப் சுற்றப்பட்ட ஆறு பைகளை சீல் செய்து தனது காற்சட்டைக்குள் மறைத்து வைத்திருந்தார். அவரைப் பிடித்து பைகளைத் திறந்து சோதனை செய்தபோது, ஒவ்வொரு பைக்குள்ளும் வெவ்வேறு அளவில், பல வகையான நிறங்களைக் கொண்ட பாம்புகள் உயிருடன் இருந்துள்ளன.
மொத்தம் 104 பாம்புகளை அவர் மறைத்து வைத்துக் கடத்தியதாக சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், பல பாம்புகள் சீன நாட்டிலுள்ள இனத்தைச் சேராதவை என்று கூறிய அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டக் காணொளியில் கடத்தி வரப்பட்ட வெவ்வேறு வகைப் பாம்புகள் அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விலங்குகள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய மையமாக சீனா இருந்து வருகிறது. ஆனால், நாட்டின் உயிரியல் பாதுகாப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு சட்டங்கள் அனுமதியின்றி அந்த நாட்டின் பூர்வீகமற்ற உயிரினங்களை நாட்டிற்குள் கொண்டு வரத் தடை விதித்திருக்கிறது.
இதுபோன்று சட்டத்தை மீறி கடத்தலில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று சீன சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.