
பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜஹான்சயீப் அலி, அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இந்தியாவிற்கு பங்கு இருக்கலாம் என்று பெண்டகனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகனில் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.
அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜஹான்சயீப் அலி, “இந்தக் கேள்வி முன்னள் அதிபர் டிரம்ப் மீதான தாக்குதல் பற்றியது. அமெரிக்க ராணுவம் அதற்கான விசாரணையில் ஈடுபட்டுள்ளதா என்று தெரியவில்லை.
ஏதேனும், ஒரு வெளிநாடு டிரம்ப்பின் கொலை முயற்சியில் ஈடுபட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஏனென்றால் நிறைய செய்திகளில் இது வெளிநாட்டு சதியாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட நியூயார்க் மற்றும் கனடாவில் அமெரிக்கர் ஒருவரின் படுகொலை முயற்சியில் வெளிநாட்டு அரசு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டிருந்தனர். அதானால், டிரம்ப் மீதான தாக்குதலில் ஏதேனும் வெளிநாடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜெனரல் பேட்ரிக் ரைடர், “ஆம். டிரம்ப் கொலை முயற்சி தொடர்பாக, இதனைக் கண்டித்து கடந்த வாரம் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஆஸ்டின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் முற்றிலும் இடமில்லை என்பதை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறேன்.
இந்தக் கேள்வி தாக்குதல் தொடர்பானது என்பதால், விசாரணைத் தொடர்பான மேற்கொண்ட கேள்விகளை எஃப்.பி.ஐ மற்றும் ரகசிய புலனாவுய்த் துறைகளிடம் கேட்குமாறு பரிந்துரைக்கிறேன்” என்று கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில் இந்திய புலனாய்வு அதிகாரி, ரா அமைப்பின் முன்னாள் தலைவர் விக்ரம் யாதவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டு அந்தக் கேள்வியை பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் ராணுவம் நவீன ஆயுதங்கள் தொடர்பாக வைத்த கோரிக்கைகளை அமெரிக்கா பரிந்துரைக்குமா என்று ஜஹான்சயீப் அலி கேட்ட கேள்விக்கு, “நான் இதுகுறித்து அறிவிப்பதற்கு எதுவுமில்லை. நாங்கள் பாகிஸ்தானுடன் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பைப் பேணுகிறோம். பாகிஸ்தானின் தேவைகளை நிறைவேற்ற அமெரிக்கா ஒத்துழைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று ஜெனரல் பேட்ரிக் ரைடர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.