
வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டில் மாணவா் போராட்டம் வெடித்தது. அதையடுத்து, விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வங்கதேச உயா்நீதிமன்றம், அரசின் அந்த உத்தரவு செல்லாது என்று கடந்த 5-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரியும் மாணவா்கள் அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின.
போராட்டக் களம் நாளடைவில் வன்முறையாக உருமாறி நிலைமை கட்டுபாட்டை மீறிச் சென்றுள்ளது வங்கதேசத்தில். போராட்டகாரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாண்டு வருகின்றனர். இதன் காரணமாக இருதரப்புக்குமிடையே மோதல் மூண்டுள்ளது.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, வங்கதேசத்தில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த பொது இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வங்கதேசத்தில் 8,500 மாணவர்கள் உள்பட சுமார் 15,000 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இதுவரை 405 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மீதமுள்ள மாணவர்களையும் தாயகம் அழைத்துவர அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவிதேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவிற்குள் - +91 1800 309 3793
வெளிநாடு - +91 80 6900 9900
தொடர்புக்கு - +91 80 6900 9901 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.