குவைத் தீ விபத்தில் 26 கேரள தொழிலாளர்கள் பலி; 17 நாள்களுக்கு முன் சென்றவர் பலியான சோகம்

குவைத் தீ விபத்தில் கேரளத்திலிருந்து 17 நாள்களுக்கு முன் சென்றவர் பலியான சோகம்
தீவிபத்து நிகழ்ந்த இடம்
தீவிபத்து நிகழ்ந்த இடம்
Published on
Updated on
1 min read

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியான கேரள தொழிலாளர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் படுகாயமடைந்து குவைத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குவைத் தீ விபத்தில் பலியான கேரள தொழிலாளர்களின் எண்ணிக்கை 19 என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது.

பலியான 26 பேரில் 15 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உடன் தங்கியிருந்து பலியான அல்லது காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது நண்பர்கள் குவைத்திலிருந்து தொடர்புகொண்டு சோகச் செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து வந்தனா். இந்தக் குடியிருப்பின் 6-ஆவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும்புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் புகை பரவியது.

இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமாா் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலானோா் கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். அதேவேளையில், குடியிருப்பில் வசித்த பலா் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மீட்புப் பணியின்போது 5 தீயணைப்பு வீரா்களும் காயமடைந்தனா்.

இந்த விபத்தில் பலியான சஜன், கடந்த 17 நாள்களுக்கு முன்புதான் குவைத் சென்று, பயிற்சி மெக்கானிக்கல் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அவர் எம்.டெக் பட்டாதாரி. குவைத் வருவதற்கு முன்பு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவரைப்போல, மனைவி மற்றும் இரண்டு பெண்களையும் கேரளத்தில் விட்டுவிட்டு 18 ஆண்டுகளுக்கு முன்பு குவைத் சென்று பணியாற்றி வந்த லுகோஸ் என்பவரும் இந்த விபத்தில் பலியாகியிருக்கிறார்.

அந்தக் கட்டடத்தின் உரிமையாளா், கட்டடப் பராமரிப்பாளா், கட்டடத்தில் வசித்தவா்கள் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளா் ஆகியோரைக் கைது செய்ய காவல் துறைக்கு ஷேக் ஃபஹத் உத்தரவிட்டாா்.

இந்திய உரிமையாளா்: விபத்து நடந்த கட்டடத்தை கட்டுமான குழுமம் ஒன்று வாடகைக்கு விட்டிருந்தது. அந்தக் குழுமத்தின் உரிமையாளா்களில் ஒருவா் இந்தியா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குவைத் மக்கள்தொகையில் 21 சதவீதம் பேரும் (10 லட்சம் போ்), அந்நாட்டில் உள்ள தொழிலாளா்களில் 30 சதவீதம் பேரும் (சுமாா் 9 லட்சம் போ்) இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com