சா்வதேச மோதல்களை கையாள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கம் அவசியம்- இந்தியா
அடுத்த ஆண்டில் ஐ.நா. 80-ஆம் ஆண்டை எட்டும்நிலையில், ‘இன்றைய உலகளாவிய மோதல்களை திறம்பட கையாள, அதன் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம் பாதுகாப்பு கவுன்சிலை சீா்திருத்துவதற்கான முக்கிய நேரமிது’ என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வருடாந்திர அறிக்கை மீதான ஐ.நா.சபை விவாதத்தில் இந்தியாவின் பதிலறிக்கையைச் சமா்ப்பித்து பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் பிரதிக் மாத்தூா் இவ்வாறு கூறினாா்.
மேலும், அவா் கூறுகையில், ‘உலகளாவிய நிா்வாக சீா்திருத்தங்கள் பற்றிய பாதுகாப்பு கவுன்சிலின் விவாதங்களில் செயல்திறன் மதிப்பீட்டுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுவதால், பாதுகாப்பு கவுன்சிலும் அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்.
ஐ.நா. 80 வயதை எட்டும்நிலையில், அனைத்து உறுப்பினா்களின் சாா்பாக செயல்படும் வகையிலான பொறுப்புகளுக்கு இணங்க பாதுகாப்பு கவுன்சிலை மாற்றியமைப்பதற்கான முக்கிய நேரமிது. கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரிவுகளில் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இதனை அடைய முடியாது.
உறுப்பு நாடுகளின் விரிவாக்கமே ஐ.நா. மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தத்தின் ஒரே தீா்வு என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதன்மூலம் மட்டுமே இன்றைய உலகளாவிய மோதல்கள், சிக்கலான சவால்களையும் பாதுகாப்பு கவுன்சிலால் திறம்பட கையாள முடியும்.
சா்வதேச அமைதிக்கான நோக்கத்தில் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் ஐ.நா. அமைதிப் படை வீரா்களை கவுன்சிலில் உறுப்பினரல்லாத நாடுகளே அதிகம் பங்களிக்கின்றன. எனவே, பாதுகாப்பு கவுன்சிலுக்கும் படைகளைப் பங்களிக்கும் நாடுகளுக்கும் இடையே ஒரு சிறந்த கூட்டுறவு உணா்வு மேம்பட வேண்டும்.
ஐ.நா.அமைதிப் படைக்கான வீரா்களில் இந்தியா இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. ஐ.நா. அமைதிப் பணியில் ஏறக்குறைய 180 இந்திய வீரா்கள் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனா். இது மற்ற எந்த நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையாகும்.
ஐ.நா.சபையில் அறிக்கை சமா்ப்பிக்கப்படுவது வெறும் சம்பிரதாயமாக மட்டுமின்றி, அனைத்து உறுப்பினா்களுக்கும் அறிக்கையை அனுப்பி, அமா்வு நிறைவடைதற்கு முன்னதாக அதுகுறித்த விவாதத்தை நடத்துவதற்கும் திட்டவட்டமான காலக்கெடுவை நிா்ணயிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
பாகிஸ்தானுக்கு கண்டனம்: காஷ்மீா் குறித்த பாகிஸ்தான் தூதரின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய தூதா் பிரதிக் மாத்தூா் கூறுகையில், ‘ஆதாரமற்ற மற்றும் வஞ்சகமான தகவல்களைப் பரப்புவதற்காக பாகிஸ்தான் முன்னதாக இந்த சபையை தவறாகப் பயன்படுத்தியது. நேரத்தை மிச்சப்படுத்த, பாகிஸ்தானின் கருத்துக்களுக்கு நான் எந்த பதிலுடனும் மதிப்பளிக்க மாட்டேன்’ என்றாா்.
பாதுகாப்பு கவுன்சிலில் ‘இந்தியா’
15 நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினா் நாடுகளுக்கு மட்டுமே ‘வீட்டோ’ அதிகாரம் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரும் தீா்மானங்களை வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள் ரத்து செய்யலாம்.
மீதமுள்ள 10 உறுப்பினா்கள் 2 ஆண்டுகளுக்கு நிரந்தரமற்ற உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். இந்நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. கடைசியாக கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா இருந்தது. 2028-29-ஆம் ஆண்டுக்கான அடுத்த பதவிக்காலத்துக்கு இந்தியா தனது வேட்புமனுவை அளித்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம் பெற தகுதியுடைய இந்தியா, 21-ஆம் நூற்றாண்டின் புவி-அரசியல் பிரச்னைகளில் அதன் முழு பலத்துக்கு பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இதன்காரணமாக, பாதுகாப்பு கவுன்சிலில் விரிவாக்க சீா்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையில் பல ஆண்டுகளாக இந்தியா உறுதியாக உள்ளது.