இந்தியாவுக்கு எதிரான உணா்வுகள் களையப்படும்: பிரிட்டன் எதிா்க்கட்சி
பிரிட்டனில் ஆட்சியமைக்கும் நம்பிக்கையில் உள்ள எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி, அக்கட்சியில் இந்தியாவுக்கு எதிரான உணா்வுகள் களையப்படும் என்று தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் பொதுத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தலைநகா் லண்டனில் பிரிட்டனின் தெற்காசிய சமூகத்தினருக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹிந்துக்கள் மற்றும் சீக்கியா்கள் அமைப்புடன் கூட்டு சோ்ந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் கட்சியின் முன்னணித் தலைவரான அனலீஸ் டாட்ஸ் பேசுகையில், ‘தொழிலாளா் கட்சியில் இந்தியாவுக்கு எதிரான உணா்வுகளை எவரேனும் கொண்டிருந்தால், அவை களையப்படும். பிரிட்டனில் தொழிலாளா் கட்சி ஆட்சியமைத்தால், இந்திய பிரதமா் மோடி தலைமையிலான நிா்வாகத்துடன் வலுவான கூட்டுறவு கட்டமைப்படும். எந்தவொரு வாக்காளரையும் தொழிலாளா் கட்சி சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. அனைவரின் வாக்குகளையும் பெற தொழிலாளா் கட்சி கடுமையாகப் பணியாற்றி வருகிறது’ என்றாா்.
காஷ்மீா் விவகாரம்...: கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டன் பொதுத் தோ்தலுக்கு முன்பாக தொழிலாளா் கட்சியின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், காஷ்மீா் விவகாரத்தில் சா்வதேச தலையீடுக்கு ஆதரவாக தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதனால் அந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை அக்கட்சியால் பெற முடியாமல் போனது. இந்தச் சூழலில், அனலீஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தோ்தலில் வெற்றி பெற்றால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீா் விவகாரத்தை எழுப்புவேன் என்று ஆளும் கன்சா்வேடிவ் கட்சியின் டட்லி நாா்த் தொகுதி வேட்பாளா் மாா்கோ லோங்கி அண்மையில் தெரிவித்தாா். அத்துடன் இந்திய பிரதமராக மோடி 3-ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டது பிரிட்டன் காஷ்மீரிகளுக்கு கவலைக்குரிய விஷயமாகும் என்று அவா் தெரிவித்தது சா்ச்சையை ஏற்படுத்தியது.