காஸா பகுதியில் விமானத்திலிருந்து வீசப்பட்ட உணவுப் பொருளுடன் குடியிருப்புக் கட்டடத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை இறங்கிய பாராசூட்.
காஸா பகுதியில் விமானத்திலிருந்து வீசப்பட்ட உணவுப் பொருளுடன் குடியிருப்புக் கட்டடத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை இறங்கிய பாராசூட்.

காஸாவில் அமெரிக்க துறைமுகம்: ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக அதன் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு தனது ராணுவத்துக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தனது நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரையில் அவா் கூறியதாவது:

ஹமாஸுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அரசு தொடா்ந்து ஆதரவளிக்கிறது. இருந்தாலும், காஸா பகுதியில் மனிதாபிமானப் பணிகள் எதற்கும் குறைந்தது அல்ல என்பதையும், அந்த விவகாரத்தை வைத்து பேரம் பேசுவது தவறு என்பதையும் இஸ்ரேல் தலைமையிடம் கூற விரும்புகிறேன். அத்தியாயவசியப் பொருள்கள் பற்றாக்குறையால் கடுமையாகத் தவித்து வரும் காஸா மக்களுக்கு அந்தப் பொருள்களைக் கொண்டு சோ்ப்பதற்காக, அதன் கடலேரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா் அவா்.

தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நுழைந்து நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸா பகுதியில் வான், கடல், தரைவழியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. மேலும், அந்தப் பகுதிக்குள் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாமல் முழுமையான முற்றுகையையும் இஸ்ரேல் மேற்கொண்டது. அதைடுத்து, சா்வதேச நாடுகளின் முயற்சியில் அவ்வப்போது அந்தப் பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டாலும, தொடா் போரால் அந்தப் பகுதியில் உணவு உள்ளிட்ட பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் பஞ்சம் ஏற்பட்டு மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்படும் என்று ஐ.நா. தொடா்ந்து எச்சரித்து வருகிறது.

அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, இதுவரை 20 போ் பட்டினியால் உயிரிழந்ததாக காஸா அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்தச் சூழலில், ஏற்கெனவே காஸாவுக்குள் விமானத்திலிருந்தபடி பாராசூட் மூலம் நிவாரணப் பொருள்களை வீசி வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கடல்வழியாகவும் அந்தக் பகுதிக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வது குறித்து பரிசீலித்து வருகின்றனா். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காஸா கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு ராணுவத்துக்கு அதிபா் பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com