
ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ்வில், நாட்டை ரஷியாவிடம் இருந்து காக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என வலியுறுத்தினார்.
போர் தொடங்கியது முதல் 7-வது முறையாக உக்ரைன் வருகைதரும் ஜெர்மன் அமைச்சர், “ரஷியாவின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களிடமிருந்து உக்ரைனை காக்க, வான் பாதுகாப்பு தளவாடங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை பாதுகாக்கவும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் மற்ற நாடுகளின் எல்லைகளுக்கு படைகள் அனுப்புவதை தவிர்க்கவும் உக்ரைனின் நட்பு அணிகள் ஒன்றுசேர வேண்டும் என பேர்பாக் தெரிவித்தார்.
உக்ரைன் வான் பாதுகாப்புக்கான ஜெர்மனின் முன்னெடுப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ந்துள்ளதாகவும் இன்னும் அதிகம் இதற்காக செலவிடவும் அவர்கள் மெனக்கெடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனில் செயல்பாட்டில் உள்ளது. அவற்றில் இரண்டினை அளித்த ஜெர்மனி மூன்றாவது பாதுகாப்பு அமைப்பை அளிப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா, மற்றொரு பாதுகாப்பு அமைப்பை வழங்க ஆலோசித்து வருகிறது.
கார்கிவ் பகுதியில் ரஷியாவின் வான்வழி தாக்குதல் நாள்தோறும் தொடர்ந்துவரும் நிலையில் அந்த பகுதியை பார்வையிட செல்லவிருந்த ஜெர்மன் அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக அணி திரட்டும் ஜெர்மனின் முயற்சி ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளில் பெரிதாக பலனளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.