டிரம்ப் அதிபரானால் மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு அதிபரின் ஆலோசகர் பதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான பேச்சுவார்த்தை குறித்து நன்கு அறிந்த ஒருவரை மேற்கோள்காட்டி ‘தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்தில் பல முறை செல்போன் மூலம் உரையாடியுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பொருளாதாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் அமெரிக்க அதிபரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் இருவரும் போட்டியிடவுள்ளனர்.
ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்க தொழிலதிபர்கள் மத்தியில் பிரசாரம் செய்யவுள்ளதாக டிரம்பிடம் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் உறுதி அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தரப்பினர் எவ்வித விளக்கமும் வெளிப்படையாக இதுவரை அளிக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப்பை நேரடியாக சந்தித்து மஸ்க், இரு தரப்பினருக்கும் தேர்தல் நன்கொடை தரப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மஸ்க் தனது செல்வாக்கை பயன்படுத்தி பைடனுக்கு எதிராக பிரசாரம் செய்வதன் மூலம் டிரம்ப்பின் வெற்றிக்கு உதவவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக பைடன் தலைமையிலான அரசின் மின்சார வாகனக் கொள்கைகள் குறித்து வெளிப்படையாக மஸ்க் விமர்சித்தாலும், டிரம்புக்கான ஆதரவை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. டிரம்பும் மஸ்கின் ஆதரவு தனக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.