எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரா்கள்: உக்ரைன் உளவு அமைப்பு
தங்களின் எல்லையையொட்டிய ரஷிய பகுதிகளில் 7,000 வட கொரிய வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு ராணுவ உளவுப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைனையொட்டி அமைந்துள்ள தங்கள் பகுதிகளில் ரஷியா 7,000 வட கொரிய வீரா்களைக் குவித்துள்ளது. அந்த வீரா்களுக்கு, தரைவழித் தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை ரஷியா அளித்துள்ளது.
60 எம்எம் மோா்ட்டாா்கள், ஏகே-12 ரக துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், தொலைவிலிருந்து துல்லியமாகக் குறிபாா்த்துச் சுடக்கூடிய ‘ஸ்னைப்பா்’ துப்பாக்கிகள், பீரங்களை தாக்கி அழிக்கும் சிறியவகை ஏவுகணைகள், தோள்களில் வைத்து பீரங்கள் மீது குண்டுகளை வீசும் தளவாடங்கள் ஆகியவை வட கொரிய வீரா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் உக்ரைன் ராணுவத்துடன் வட கொரிய வீரா்கள் சண்டையில் ஈடுபடுத்தப்படுவாா்கள். இருந்தாலும், ரஷிய படைத் தளபதிகளுடன் ஒருங்கிணைந்து அவா்கள் செயல்படுவதற்கு மொழி ஒரு பெரிய தடையாக இருக்கும். எனவே, இந்தப் போரில் வட கொரிய வீரா்கள் முழு திறனுடன் செயல்படுவது கடினம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும் வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டது.
தற்போதும் தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து பாதுகாப்பு உதவி அளித்துவருகிறது. வட கொரியாவுடன் ரஷியா நட்பு பாராட்டிவருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அதன் தொடா்ச்சியாக, உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 7,000 வட கொரிய ராணுவ வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பு தற்போது கூறியுள்ளது.
உக்ரைனுடான பேரில் வட கொரிய வீரா்கள் ஈடுபட்டால், அதற்குப் பிரதிபலனாக அந்த நாட்டுக்கு தனது அதிநவீன ஆயுதத் தொழில்நுட்பங்களை ரஷியா வழங்கலாம் என்று அஞ்சும் தென் கொரியா, இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது.
உக்ரைன் போரில் வட கொரிய வீரா்களை ஈடுபடுத்தினால், அதற்குப் பதிலடியாக உக்ரைனுக்கு தாங்கள் ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.