
காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக பேரணியில் பங்கேற்ற காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிராம்டன் நகரில் ஹிந்து சபா கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் கொடிகளுடன் அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள், கோயிலில் இருந்த பக்தா்களை தடிகளால் தாக்கினா். இந்தச் சம்பவம் தொடா்பான காணொலி சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட நிலையில், வன்முறையில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு காவல் துறை தெரிவித்தது.
கோயிலின் வெளியே போராட்டக்காரர்கள் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகின.
இதுகுறித்து பீல் காவல்துறை தரப்பில் கூறுகையில், “இணையத்தில் வைரலான காணொளிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் காவல்துறை அதிகாரி காலிஸ்தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு மற்றும் காவல்துறை சட்டத்தின்படி அந்தக் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விடியோவில் உள்ளவற்றை முழுமையாக ஆராய்ந்து வருகிறோம். மேலும், இதுகுறித்த தகவல்களை வழங்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.
போராட்டம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “கனடாவில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளோம். ஒண்டாரியோவின் பிராம்ப்டனில் ஹிந்து சபா கோயிலில் பிரிவினைவாதிகள் நடத்திய வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கோயில்களை பாதுகாக்க கனடா அரசைக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா்.
அப்போது முதலே இந்தியா-கனடா இடையிலான உறவில் விரிசல் நிலவி வருகிறது. எனினும் ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.