
அமெரிக்காவின் வாக்குறுதிக்காக வாக்களியுங்கள் என்று அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் இன்று(நவ.5) நடைபெறும் அமெரிக்க தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் வாக்குறுதியை நாங்கள் நம்புகிறோம்.
அமெரிக்காவுக்காக போராடத் தயாராகவுள்ளோம். மேலும் தனது எக்ஸ் தளத்தில் பிரசார விடியோவையும் வெளியிட்டு ‘நாளை’ என்று மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய நாளான நேற்று பெனிசில்வேனியாவில் உள்ள வாக்காளர்களைச் சந்தித்து கமலா ஹாரிஸ் ஆதரவு திரட்டினார்.
கமலா ஹாரிஸ் சில முக்கிய மாநிலங்களான விஸ்கான்சின், வட கரோலினா, ஜார்ஜியா மற்றும் மிச்சிகன் ஆகிய இடங்களிலும் அவர் பிரசாரப் பேரணிகளை நடத்தினார்.
பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் பேசுகையில், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டியதற்கான அவசியம் குறித்து பேசினார். நானும் துப்பாக்கி வைத்திருக்கிறேன். நாம் குழந்தைகளையும், சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க, துப்பாக்கிகள் மீதான தடையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
போதைப் பொருளான கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதாகவும் உறுதியளித்தார். மேலும், அனைத்து அமெரிக்கர்களும் வெற்றிபெற வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று அவர் கூறினார்.
59 வயதான கமலா ஹாரிஸ் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் முதல் முறையாக பதவியேற்கப் போகும் முதல் பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க அதிபர் என்ற சிறப்பையும் பெறுவார். ஒரு பெரிய அரசியல் கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ள இரண்டாவது பெண் என்ற சிறப்பையும் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.