
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
மற்ற நாடுகளின் பொதுத் தேர்தலைப் போல அல்லாமல், அமெரிக்க அதிபர் தேர்தல், உலக அரங்கின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப், இந்த முறை மீண்டும் களமிறங்கி வெற்றியை தன்வசமாக்கிவிட்டார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியறிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், நண்பர் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற எனது நண்பர் டிரம்பிற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
சிறந்த கம்பேக்..
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டிருப்பது வரலாற்றின் மிகச் சிறந்த கம்பேக் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புகழாரம் சூட்டியிருக்கிறார். டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவுக்கு புதிய தொடக்கமாக அமையட்டும். இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான நட்புக்கு சக்திவாய்ந்த உறுதி கிடைத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல, உலகத் தலைவர்கள் அனைவருமே தங்களது வாழ்த்துகளை மழையாகப் பொழியத் தொடங்கிவிட்டார்கள்.
இந்தியா - அமெரிக்கா உறவில்..
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், இந்தியாவுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கவும், சில நடைமுறைகள் சவாலாக மாறவும் என இரண்டு வாய்ப்புகளுமே உள்ளன.
ஏற்கனவே அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவுக்குத்தான் முன்னுரிமை என்ற கொள்கையை திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
பிரதமர் மோடிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையேயான உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம், ஹௌடி மோடி என்றும், நமஸ்தே டிரம்ப் என்றும் எழும்பிய முழக்கங்களே உதாரணம்.
இந்தியாவுக்கு, மிக முக்கியமான கொள்கைக் கூட்டாளி அமெரிக்கா, ஆனாலும், வணிகம், ராணுவ கூட்டாண்மை, தூதரக உறவுகள், குடியேற்றம் போன்றவை சவாலாகவே இருக்கும். என்னதான் நட்பு என்றாலும், தனது கொள்கையில் கொஞ்சமும் விட்டுத்தர மாட்டார் டிரம்ப்.
முதலில், டிரம்புக்கு, அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்குமே முக்கியம் என்பதால் வெளிநாட்டு ஒப்பந்தங்களை அவர் அறவே விரும்ப மாட்டார். இதனால், இந்தியாவில் தகவல்தொழில்நுட்ப வாய்ப்புகள் பாதிக்கப்படலாம்.
இறக்குமதிக்கும் எதிரானவர்
கடந்த ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகப்படியான வரியை விதிக்கும் முறையை கொண்டு வந்தவர். அமெரிக்காவை மிகப்பெரிய வளம்கொண்ட நாடாக மாற்றுவதற்கான திட்டத்துடன் வந்துள்ளேன் என்றும், வெளிநாடுகள் அதிக வரி வசூலிக்கும்போது நாம் மட்டும் வசூலிப்பதில்லை என்றும், அதில் இந்தியாவும் மிகப்பெரிய வசூல் மையம்தான் என்றும் குறிப்பிட்டே பேசியிருந்தார். ஆனாலும், இந்தியாவுடனான அவரது உறவையும் அவர் அழுத்தம் திருத்தமாக உறுதி செய்திருந்தார். இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாட்டில் அதிக வரி விதிக்கப்பட்டால், நம் நாட்டின் ஏற்றுமதி சரியும் அபாயம் உள்ளது.
குடியுரிமை
அமெரிக்காவில் வெளிநாட்டிரின் குடியுரிமையில் சற்று கறாராகவே இருப்பார் டிரம்ப். குறிப்பாக எச்-1பி விசா முறையில் கொண்டு வரப்படும் அழுத்தம் இந்தியர்களை அதிகம் பாதிக்கும் அபாயம் இருக்கலாம். கடந்த ஆட்சிக் காலத்தைப் போலவே அவர் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், அந்நாட்டில் பணியாற்றும் ஏராளமான இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் நிலைமை மோசமாகலாம்.
ராணுவ ஒத்துழைப்பு
அண்மைக் காலமாக இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஜோ பைடன் ஆட்சியின்போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள், சீனாவின் கை ஓங்குவதைத் தடுக்கும் வகையில் தொடரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் ஆதிக்கத்தைத் தவிர்க்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆட்சியின்போதும், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் ராணுவ உறவை கடைப்பிடித்தார். தொடர்ந்து ராணுவ ஆயுதங்கள் பரிமாற்றம், தொழில்நுட்பப் பரிமாற்றம் என ராணுவ உறவு மேம்படும் என்றே கூறலாம்.
வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டுவது என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராகியிருப்பதால், பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் பல கால கோரிக்கைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.