வாஷிங்டன், கலிஃபோர்னியாவில் கமலா ஹாரிஸின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், வாஷிங்டன், கலிஃபோர்னியா போன்ற அதிக பிரதிநிதிகளை கொண்ட மாகாணங்களில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ், டிரம்பை நெருங்கி வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
மொத்தம் 50 மாகாணங்களில் 538 பிரதிரிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற 270 பிரதிநிதிகள் தேவை. காலை 10 மணி நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சியின் 230 வேட்பாளர்களும், ஜனநாயகக் கட்சியின் 187 வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.
இதுவரை டிரம்ப் 24 மாகாணங்களையும், கமலா ஹாரிஸ் 14 மாகாணங்களையும் கைப்பற்றியுள்ளார்கள். வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 51.4%, கமலா 47.2% பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபரை முடிவு செய்யும் போர்க்கள மாகாணங்களான வடக்கு கரோலினா, மிஷிகன், அரிஸோனா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், ஜாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.