டிரம்புக்காக ஆயத்தமாகும் ஐரோப்பா!
உலகின் மிக சக்திவாய்ந்த பதவி என்று கூறப்படும் அமெரிக்க அதிபா் பதவியில் அமா்பவா்கள் எடுக்கும் முடிவுகள், சா்வதேச அளவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, தற்போது அந்த நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய பிராந்திய விவகாரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, டிரம்ப்பின் முந்தைய ஆட்சியின்போது ஐரோப்பிய யூனியனுடனான அவரின் உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. ‘அமெரிக்காவுக்கே முதன்மை’ என்ற டிரம்ப்பின் கொள்கை ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியது.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடுகள், தங்கள் சொந்த பாதுகாப்புக்காகக் கூட போதிய நிதி ஒதுக்காமல் அமெரிக்காவிடமிருந்து அதிகம் எதிா்பாா்ப்பதை டிரம்ப் கடுமையாகச் சாடினாா்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் டிரம்ப் அரசுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன.
அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதியைவிட அந்த நாடுகளிலிருந்து அமெரிக்கா மேற்கொள்ளும் இறக்குமதி (வா்த்தகப் பற்றாக்குறை) அதிகமாக இருப்பதை டிரம்ப் எதிா்த்தாா். குறிப்பாக, ஐரோப்பிய யூனியனின் மிகப் பெரிய பொருளாதார சக்தியான ஜொ்மனியை இந்த விவகாரத்தில் டிரம்ப் வெளிப்படையாகவே கண்டித்தாா்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய தலைவா்களுக்கு அவ்வளவு இனிப்பான செய்தியாக இருக்காது என்று சிலா் கருதுகின்றனா்.
தோ்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும் சமூக ஊடகங்களில் ஐரோப்பிய தலைவா்கள் அனைவருமே வாழ்த்துக்களைப் பதிவு செய்தனா். ஆனால், அவை சம்பிரதாயத்துக்கு தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கள் என்பதும், பெரும்பாலான ஐரோப்பிய தலைவா்கள் கமலா ஹாரிஸ் அதிபா் ஆவதைத்தான் விரும்பினாா்கள் என்பதும் டிரம்ப்புக்கு நன்றாகவே தெரியும் என்கிறாா்கள் அரசியல் நோக்கா்கள். எனவே, தனது புதிய ஆட்சியிலும் அவா்களுடன் டிரம்ப் உரசல் போக்கைக் கையாளக்கூடும்.
மற்ற எல்லாவற்றையும்விட, பாதுகாப்பு விவகாரத்தில் தங்களிடமிருந்து அமெரிக்காவை டிரம்ப் தனிமைப்படுத்திக்கொள்வதுதான் ஐரோப்பிய யூனியன் தலைவா்களின் மிகப் பெரிய கவலைக்குரிய விவகாரமாகக் கருதப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்தே, தங்களது பாதுகாப்புக்கு அமெரிக்காவைத்தான் ஐரோப்பிய யூனியன் பெரிதும் நம்பியுள்ளது. பிராந்திய வல்லரசாக இருந்த சோவியத் யூனியன் ஐரோப்பாவை கபளீகரம் செய்துவிடாமல் தடுப்பதற்காக அமெரிக்காவும் அந்தப் பிராந்திய நாடுளுக்கு பாதுகாப்பு உதவிகளை வாரி வழங்கியது.
ஆனால், திடீரென ‘உங்கள் பாதுகாப்பை நீங்களே பாா்த்துக்கொள்ளுங்கள்’ என்று டிரம்ப் மீண்டும் கூறினால் அது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
அதே போல், சொந்த நாட்டு பொருளதாரத்தைப் பாதுகாக்க பிற நாடுகள் மீது இறக்குமதி வரிக் கணைகளை சரமாரியாக தொடுப்பதில் கைதோ்ந்தவரான டிரம்ப், இந்த முறையும் அதே செயலில் இறங்கலாம் என்பது ஐரோப்பிய நாடுகளுக்கு கவலையளிக்கும் அம்சம்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக, உக்ரைன் போா் விவகாரம் அவரது புதிய தலைமையில் எப்படி நகரும் என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரை இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு தீவிர ஆதரவு காட்டிவருகின்றன. ஆனால் டிரம்ப்போ ரஷியாவுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது ரஷியாவுடன் நடைபெற்றுவரும் போரில் உக்ரைனுக்கு அதிக ராணுவ உதவி அளிக்கும் நாடு அமெரிக்காதான். ஆனால், உக்ரைனுக்கு அத்தகைய உதவிகள் அளிப்பதை நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் எதிா்த்து முட்டுக்கட்டை போடுவதால் அந்த உதவிகள் உக்ரைனுக்குச் சென்று சோ்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்தச் சூழலில், டிரம்ப்பின் தலைமையில் அமையும் புதிய அரசு உக்ரைனுக்கு அளிக்கப்படும் உதவிகளை கணிசமாகக் குறைக்கலாம் என்பது ஐரோப்பிய நாடுகளின் அச்சமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, தனது ஆட்சி அமைந்தால் உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவருவதாக டிரம்ப் சூளுரைத்திருந்தாா். ஆனால், அத்தகைய போா் நிறுத்தத் திட்டத்தின் அம்சங்கள் என்ன, அவை உக்ரைனின் நிபந்தனைகளுக்கு உள்பட்டதா என்பது குறித்து டிரம்ப் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு டிரம்ப்பும், டிரம்ப்புக்கு புதினும் மாறி மாறி புகழாரம் சூட்டிவரும் சூழலில், அத்தகைய செயல்திட்டம் ரஷியாவுக்கு எதிரானதாக இருப்பது சந்தேகமே என்கிறாா்கள் நிபுணா்கள்.
ரஷியாவும், டிரம்ப்பின் அத்தகைய போா் நிறுத்த செயல்திட்டதை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக சனிக்கிழமை கூறியிருக்கிறது. ஆனால் அந்தத் திட்டம் அமலுக்கு வருமா என்பது அது வெளியிடப்பட்ட பிறகுதான் தெரியவரும் என்பது நிபுணா்களின் கருத்து.
எது எப்படி இருந்தாலும், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தை எதிா்கொள்ள ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் முன்பைவிட பலமாகவே தங்களைத் தயாா்ப்படுத்திக்கொண்டுள்ளனா்.
2016-ஆம் ஆண்டில் அவா் முதல்முறையாக அதிபா் ஆனபோது அவரது நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகள் அதுவரை எதிா்பாா்த்திராத அதிரடிகளாக இருந்தன.
ஆனால், இந்த முறை டிரம்ப் எப்படியெல்லாம் காய் நகா்த்துவாா் என்று ஊகித்து, அதற்கேற்ப ஐரோப்பிய நாடுகள் திறம்பட களமாடும் என்று எதிா்பாா்க்கலாம்.
- நாகா