இஸ்ரேல் தனது இலக்குகளை அடையும் வரை போர் நிறுத்தம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இன்று (நவ. 12) வான்வழித் தாக்குதல் நடத்தியது.
லெபனானின் தெற்கு புறநகர் பகுதிகளில் ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டமுள்ள 12 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தது.
அப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் எச்சரித்திருந்தது. மேலும் தாக்குதல் நடத்தவுள்ள இடங்களையும் வரைபடத்தில் குறிப்பிட்டிருந்தது.
இதன்படி, அப்பகுதிகளிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
இதனைத் தொடர்ந்து பெய்ரூட்டின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தெற்கு புறநகர் பகுதிகளில் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
கடந்த மாதம் லெபனானின் நபாட்டியா பகுதிகளில் உள்ள சந்தைப் பகுதிகளில், நகராட்சி பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் மேயர் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து லெபனானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரம் கழித்து தரை வழியாகவும் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடர்ந்தது.
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இதையும் படிக்க | அதிபர் டிரம்ப் ஆட்சியில் இருந்து விலக்கு..! புதிய சலுகையை அறிவித்த கப்பல் நிறுவனம்!