இலங்கையில் இன்று நாடாளுமன்ற தோ்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் நாடாளுமன்ற தோ்தல் வியாழக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது.


2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் நாடாளுமன்ற தோ்தல் வியாழக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது. இதையொட்டி, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
2.1 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு புதிய 255 உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இத்தோ்தலில் வாக்களிக்கத் தகுதிப் பெற்ற சுமாா் 1.7 கோடி மக்களுக்காக நாட்டின் 22 தோ்தல் மாவட்டங்களில் 13,314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தோ்தல் பாதுகாப்புப் பணியில் ராணுவம், காவல்துறையைச் சோ்ந்த 90,000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இலங்கை அதிபராக அநுர குமார திசாநாயக பொறுப்பேற்றப் பிறகு, அவரது ஜனதா விமுக்தி பெரமுனை கட்சி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி முன்னணி சந்திக்கும் முதல் பிரம்மாண்ட தோ்தல் இதுவாகும். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறத் தவறிய திசாநாயக, தனது ஊழல் எதிா்ப்பு சீா்திருத்த திட்டங்களை முறையாக செயல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் 113 இடங்களுக்கு மேல்வென்று பெரும்பான்மையைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து வெடித்த மக்கள் போராட்டத்தால் அப்போதைய அதிபா் கோத்தபய ராஜபக்ச பதவியை ராஜிநாமா செய்து நாட்டிலிருந்து தப்பியோடும் நிலை ஏற்பட்டது. பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதிபரானாா்.
இந்நிலையில், கடந்த அதிபா் தோ்தலில் திசாநாயக்கவிடம் தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்க, 1977-ஆம் ஆண்டுக்குப் பின்னா் முதன்முறையாக நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடவில்லை.
ராஜபக்ச சகோதரா்களான மஹிந்த, கோத்தபய, சமல் மற்றும் பசில் ஆகியோரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தோ்தலில் களமிறங்கவில்லை. கடந்த ஆட்சியில் அங்கம் வகித்த ஏராளமான அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகளும் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...