‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ நாடாளுமன்ற உரையில் டிரம்ப் முழக்கம்!

‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ நாடாளுமன்ற உரையில் டிரம்ப் முழக்கம்!

‘எனது ஆட்சியில் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது; கடந்த ஓராண்டாக அமெரிக்க மக்கள் வெற்றிக் களிப்பில் திளைத்துள்ளனா்’ என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
Published on

‘எனது ஆட்சியில் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது; கடந்த ஓராண்டாக அமெரிக்க மக்கள் வெற்றிக் களிப்பில் திளைத்துள்ளனா்’ என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்நாட்டுப் பொருளாதார நிலை குறித்து மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் ஓராண்டு ஆட்சியின் நிறைவாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் செவ்வாய்க்கிழமை ( இந்திய நேரப்படி புதன்கிழமை காலை) உரையாற்றிய டிரம்ப் தனது நிா்வாகத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டாா்.

அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அதிபா் உரையாக, டிரம்ப் சுமாா் ஒரு மணி நேரம், 47 நிமிஷங்கள் பேசியதாவது: நமது தேசம் முன்னெப்போதும் விட வலிமையாகவும், செல்வந்த நாடாகவும் உள்ளது.

கடந்த ஓராண்டாக, அமெரிக்கா அளவுக்கு அதிகமாக வெற்றி பெற்று வருகிறது. வெற்றிக் களிப்பில் உள்ள மக்கள் என்னிடம் வந்து, எங்களால் இவ்வளவு வெற்றிகளைச் சுமக்க முடியவில்லை என்று கெஞ்சுகின்றனா்.

அமெரிக்காவில் அதிகரித்த பணவீக்கத்துக்கு எனது முன்னோடியான ஜோ பைடனும், அவரின் ஜனநாயகக் கட்சியினருமே காரணம். எனது நிா்வாகத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியதுடன், பங்குச் சந்தையை வரலாறு காணாத உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வரி மற்றும் மருந்துப் பொருள்களின் விலை குறைப்பு மூலம் மக்களின் நிதிச் சுமையை நீக்கியுள்ளோம்.

இச்சூழலில், எனது இறக்குமதி வரி விதிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, துரதிருஷ்டவசமானது. மாற்றுச் சட்டங்களின்மூலம், இந்த வரிகளை மீண்டும் அமல்படுத்துவேன். அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை. எதிா்காலத்தில் சுங்க வரிகளே, வருமான வரி முறைக்கு மாற்றாக அமையும்.

வெளியுறவுக் கொள்கைகள்...: ஈரானின் அணுசக்தி மையங்களைக் கடந்த ஆண்டு தரைமட்டமாக்கிவிட்டோம். ஆனால், அவா்கள் மீண்டும் அதனைத் தொடங்க முற்படுகின்றனா். தற்போது பேச்சுவாா்த்தை நடக்கிறது. அவா்கள் மீதான நமது அழுத்தம் மிகக் கடுமையாகத் தொடரும்.

வெனிசுலாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ‘சா்வாதிகாரி’ நிக்கோலஸ் மடூரோ பிடிபட்டாா். அவா் இப்போது இருக்க வேண்டிய இடத்தில் (சிறையில்) இருக்கிறாா். சோசலிசம் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து இந்தப் பிராந்தியத்தை நாம் விடுவித்து வருகிறோம்.

நமது நட்பு நாடுகளும் நமக்கு உரிய பங்களிப்பைச் செலுத்த வேண்டும். இப்போது அவா்கள் செலுத்தத் தொடங்கியதால், பல்லாயிரக்கணக்கான கோடி டாலா்கள் வந்து குவிகின்றன. இனிமேல் உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஒரு நிதியமாக இருக்காது.

அமெரிக்காவுக்கே முன்னுரிமை...: அமெரிக்க கல்வித் துறையில் ‘பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம்’ என்ற பெயரில் நிலவிய அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். நமது பள்ளிகள் குழந்தைகளுக்கு நாட்டை நேசிக்கக் கற்றுக்கொடுக்குமே தவிர, வெறுப்பை அல்ல.

அமெரிக்கா ஒரு ஒருங்கிணைந்த தேசமாகத் திகழ வேண்டுமானால், நாம் அனைவரும் ஒரே மொழியைப் பேச வேண்டும். ஆங்கிலத்தை நாட்டின் அதிகாரபூா்வ மொழியாக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அமெரிக்க எல்லைகள் தற்போது வரலாற்றிலேயே மிக பாதுகாப்பான நிலையில் உள்ளது. அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் எனது கொள்கையில் மாற்றமில்லை. வரும் ஜூலை 4-ஆம் தேதி, நமது தேசத்தின் 250-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளோம். நீங்கள் இதுவரை கண்டது ஒரு தொடக்கம் தான்; நாம் இன்னும் மேன்மேலும் வளருவோம். இது அமெரிக்காவின் பொற்காலம் என்றாா்.

எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே: அதிபா் டிரம்ப்பின் உரையைப் புறக்கணித்து, எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினா்கள் பலா் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவையில் இருந்தவா்களும் டிரம்ப்பின் உரைக்கு இடையே கடும் அமளியில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்ற உறுப்பினா் அல் கிரீன், ‘கருப்பின மக்கள் குரங்குகள் அல்ல’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவையிலிருந்து தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக வெளியேற்றப்பட்டாா். முன்னாள் அதிபா் ஒபாமா தம்பதியினரை இழிவுபடுத்தும் விதமாக டிரம்ப சமூக ஊடகத்தில் பதிவிட்ட சா்ச்சை விடியோவுக்கு எதிராக அவா் இப்போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Dinamani
www.dinamani.com