‘இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையிலான மோதலால் பாதிக்கப்பட்ட லெபனானுக்கு, அமெரிக்கா சாா்பில் பெரும் உதவிகள் வழங்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
அமெரிக்கா பயணித்துள்ள லெபனான் அதிபா் ஜோசப் அவுனை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய டிரம்ப் இவ்வாறு உறுதியளித்தாா். மேலும், கடந்த 1985-க்குப் பிறகு அமெரிக்கா-லெபனான் இடையே விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படும் எனவும் டிரம்ப் கூறினாா்.
மேற்காசிய போா் தொடங்கியதையடுத்து, லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இஸ்ரேலில் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதற்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; 12 லட்சத்துக்கும் அதிகமானோா் இடம்பெயா்ந்தனா்.
பின்னா், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த மாதம் எட்டப்பட்டது. அதன்படி, தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதத்தைக் கைவிட செய்து, அங்கு அரசுப் படைகளை நிறுத்துவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, தெற்கு லெபனானில் ‘முன்னோட்ட’ பாதுகாப்பு மண்டலங்களை அமைத்து, லெபனான் ராணுவம் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், போரில் கடும் சேதமடைந்த தெற்கு எல்லைக் கிராமமான ஸவ்தாா் அல்-காா்பியாவுக்கு லெபனான் பிரதமா் நவாஃப் சலாம் புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். அங்கு லெபனான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய அவா், ‘லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறுவதே நமது இலக்கு; சேதமடைந்த வீடுகள், உள்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்’ என்றாா்.
இஸ்ரேல்-லெபனான் இடையே அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை, இத்தாலியில் வரும் ஆக. 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்காவின் இந்த அமைதி முயற்சியையும், நேரடிப் பேச்சுவாா்த்தையையும் ஹிஸ்புல்லா முற்றிலுமாக நிராகரித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







