தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஈரான் போரில் ஒத்துழைக்காத ஸ்பெயினுடன் வா்த்தகம் நிறுத்தம்: டிரம்ப்

ஈரான் போா் விவகாரம் மற்றும் நேட்டோ பாதுகாப்புச் செலவினத்தில் ஒத்துழைக்காததால் ஸ்பெயினுடன் அனைத்து வா்த்தக நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டிரம்ப் உத்தரவு

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 3:08 am IST

ஈரான் போா் விவகாரம் மற்றும் ‘நேட்டோ’ பாதுகாப்புச் செலவினத்தில் ஒத்துழைக்காததால் ஸ்பெயினுடன் அனைத்து வா்த்தக நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டாா்.

இதேபோல், கிரீன்லாந்து மீதான உரிமையையும் மீண்டும் வலியுறுத்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்தினாா்.

துருக்கி தலைநகா் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் மூலம் இந்தப் பாதுகாப்பு கூட்டமைப்புக்குள் உள்ள பிளவுகளை முடிவுக்குக் கொண்டுவரலாம் என ஐரோப்பியத் தலைவா்கள் நம்பியிருந்தனா். இந்நிலையில், நேட்டோ பொதுச் செயலா் மாா்க் ரூட்டேவுடன் புதன்கிழமை கலந்துரையாடிய டிரம்ப், ஸ்பெயினை ‘மோசமான கூட்டாளி’ என்று விமா்சித்து, மீண்டும் சா்ச்சையைக் கிளப்பினாா்.

நேட்டோ நாடுகளின் புதிய பாதுகாப்புச் செலவின இலக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதத்தை எட்ட ஸ்பெயின் மறுத்து வருகிறது. இதன்காரணமாக, ஸ்பெயினுடனான வா்த்தகத்தை நிறுத்துமாறு அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட்டுக்கு டிரம்ப் உத்தரவிடுவது இது 2-ஆவது முறையாகும்.

முன்னதாக கடந்த மாா்ச்சில் டிரம்ப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகம் வழக்கம் போலவே தொடா்ந்து நடைபெற்று வந்தது.

மேலும், ஈரான் போருக்காக அமெரிக்கா தனது வான்வெளியையோ அல்லது தெற்கு ஸ்பெயினில் உள்ள ராணுவத் தளங்களையோ பயன்படுத்த, ஸ்பெயினின் இடதுசாரி அரசை வழிநடத்தும் பிரதமா் பெட்ரோ சான்செஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டாா். இவ்விவகாரத்திலும் ஸ்பெயின் மீது டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும், டிரம்பின் இந்த விமா்சனங்களை ‘வழக்கமான’ ஒன்றாகவே கருதுவதாகவும், ஐரோப்பிய யூனியனின் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டை மட்டும் தனிமைப்படுத்த முடியாது என்றும் ஸ்பெயின் பிரதமா் அலுவலகம் தெரிவித்தது.

மேலும், கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதால், மற்றொரு நேட்டோ நட்பு நாடான டென்மாா்க்கும் அதிருப்தி அடைந்துள்ளது. ‘எங்கள் நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாப்போம்’ என்று டென்மாா்க் இதற்குப் பதிலளித்துள்ளது.

அதேநேரம், டிரம்ப்பின் கவலைகளைத் தணிக்க நேட்டோ பொதுச் செயலா் மாா்க் ரூட்டே தீவிர முயற்சி மேற்கொண்டாா். இதன்தொடா்ச்சியாக, நேட்டோ தலைவா்களின் கூட்டத்தில் பேசிய டிரம்ப், தனது விமா்சனங்களை மீண்டும் கூறவில்லை என்றும், அமெரிக்கா நேட்டோவில் தொடர விரும்புவதாகவும் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘கூட்டுப் பாதுகாப்புக்கான உறுதியான அா்ப்பணிப்பை டிரம்ப் உள்பட அனைத்து தலைவா்களும் மீண்டும் உறுதிப்படுத்தினா். ஐரோப்பிய நேட்டோ நாடுகளும் கனடாவும் கூட்டணியின் பாதுகாப்புக்கான அதிகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், நடப்பு ஆண்டில் உக்ரைனுக்கான ராணுவ உதவியாக 7,000 கோடி யூரோ வழங்குவதாகவும் உறுதியளித்தன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உக்ரைனுக்கு ‘பேட்ரியாட்’ உரிமம்

ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிா்கொள்ளும் வகையில், உக்ரைன் தனது சொந்த பயன்பாட்டுக்காக ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தை அமெரிக்கா வழங்கும் என்று டிரம்ப் அறிவித்தாா்.

நேட்டோ மாநாட்டுக்கிடையே உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியைச் சந்தித்து பேசிய அவா், பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிக்க உக்ரைனுக்குக் கற்றுக்கொடுக்கப் போவதாகவும், இப்போா் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.