இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய (54) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
அதிபர் அநுர குமார திசாநாயக முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் இன்று காலை ஹரிணி அமரசூர்ய மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்று அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்றார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்தபோதும், புதிய அதிபா் அநுரகுமார நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில், 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் வேண்டிய நிலையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமராக இருந்த ஹரிணி அமரசூர்ய, மீண்டும் பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன், வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜிதா ஹெராத் உள்ளிட்டோர் அதிபர் முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
1994-ஆம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக பதவியேற்றதற்குப் பிறகு, இலங்கை பிரதமராக ஒரு பெண் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
பெண்கள் உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான ஹரிணி, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.