தில்லி கல்லூரி முதல் இலங்கை பிரதமர் வரை... அமரசூரிய யார்?

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய பற்றி...
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் ஹரிணி அமரசூரிய (கோப்புப்படம்)
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் ஹரிணி அமரசூரிய (கோப்புப்படம்)ANI
Published on
Updated on
1 min read

இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரிய, தில்லி ஹிந்து கல்லூரியில் படித்த மாணவி ஆவார்.

இலங்கையில் கடந்த செப்டம்பர் வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பதவியேற்றார்.

இதையடுத்து, அப்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியவை நியமித்தார் திசாநாயக.

நாடாளுமன்ற பதவிக் காலம் இன்னும் 11 மாதங்கள் இருந்தபோதும், அவையைக் கலைத்து அதிபர் உத்தரவிட்ட நிலையில், கடந்த வாரம் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

இலங்கை கலவரத்துக்கு பிறகு முதல்முறையாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

ஹிந்து கல்லூரியின் முன்னாள் மாணவி

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரிய, தில்லியில் உள்ள ஹிந்து கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார்.

1991 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில் ஹிந்து கல்லூரியில் சமூகவியல் துறையில் பயின்று பட்டம் பெற்றுள்ளார் ஹரிணி அமரசூரிய.

தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் மானுடவியல் படிப்பு மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டமும் ஹரிணி பெற்றுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள ஹரிணி, இளைஞர்கள், அரசியல், பாலினம், வளர்ச்சி, குழந்தைகள் பாதுகாப்பு, உலகமயமாக்கல் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் செய்ததுடன் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

மூன்றாவது பெண் பிரதமர்

பெண்கள் உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான ஹரிணி, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 1994-ஆம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக பதவியேற்றதற்குப் பிறகு, இலங்கை பிரதமராக ஒரு பெண் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

இலங்கை பிரதமராக பதவியேற்ற முதல் கல்வியாளர் என்ற பெருமையும் ஹரிணிக்கு சொந்தமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com