
லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் காட்விக் விமானம் நிலையம் அருகே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது குறித்து லண்டன் பெருமாநகராட்சி காவல்துறையினர் இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார்கள்.
லண்டனின் நைன் எல்ம்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் காட்விக் விமான நிலையத்தின் தெற்கு முனையப் பகுதியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், பிரிட்டன் முழுக்க உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே, சந்தேகத்துக்கு இடமான ஒரு பொருள் இருந்தது குறித்து காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அவர்கள் விரைந்து வந்து அதனை சோதனை செய்தனர். முன்னெச்சரிக்கையாக அந்த சாலை முழுக்க போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில், பயங்கர சப்தம் கேட்டநிலையில், அது குறித்து காவல்துறையினர் விளக்கம் கொடுத்திருக்கிறார். கண்டெடுக்கப்பட்ட வெடிபொருளை, வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக வெடிக்கவைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக தொடரும் என்றும் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, பிரிட்டனின் காட்விக் விமான நிலையத்தின் தெற்கு முனையத்தில், மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை முற்றிலும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு, யாரும் அங்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் வெளியான தகவலில், அங்கு சந்தேகத்துக்கு இடமான பையில், வெடிபொருள் போன்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் வெடிபொருள் செயலிழப்பு நிபுணர்களை வரவழைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே அங்கிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த விமான நிலையத்துக்கு வரும் சில சாலைகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.