மோடியும் கனடா பிரதமரும்..
மோடியும் கனடா பிரதமரும்..AP

நிஜ்ஜார் கொலை: மோடியை தொடர்புபடுத்தும் செய்தியை மறுத்த கனடா அரசு!

நிஜ்ஜார் கொலை வழக்கில் மோடியை தொடர்புபடுத்திய செய்தி குறித்து கனடா அரசு விளக்கம்..
Published on

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தும் வகையில் வெளியான ஊடக செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.

கனடாவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடா அரசு மறுப்பு

கனடா ஊடக செய்தியை மறுத்து அந்நாட்டு பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகள் மீது கனடா காவல்துறையினர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஆனால், பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தி கனடா அரசு எதுவும் கூறவில்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை.

இதற்கு எதிர்மாறாக வெளியாகும் அனைத்து செய்திகளும் தவறானவை” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா கண்டனம்

கனடா பத்திரிகை செய்தியை தொடர்ந்து, இந்தியா - கனடா இடையேயான உறவு மேலும் சேதப்படுத்தும் வகையில் உள்ளதாக வெளியுறவுத் துறை புதன்கிழமை தெரிவித்திருந்தது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்வால் பேசியதாவது:

“பொதுவாக ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை. எனினும், கனடா அரசு தகவல் என்று ஒரு நாளிதழ் குறிப்பிடும்போது, அதனை கண்டித்து நிராகரிக்க வேண்டும்.

இதுபோன்ற அவதூறு பரப்புரைகள், ஏற்கெனவே சிதைந்து கிடக்கும் நமது உறவுகளை மேலும் சேதப்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொலம்பியாவில் கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி என்று இந்தியாவால் அடையாளப்படுத்தப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் இந்திய அரசின் பங்கு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு முதலே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com