தடையை மீறி போராட்டம்! இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினா் பேரணி!

பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாதில் போராட்டம் நடத்துவதற்காக முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் பேரணி
இஸ்லாமாபாதை நோக்கி வாகனங்களில் செல்லும் இம்ரான் கான் ஆதரவாளா்கள்.
இஸ்லாமாபாதை நோக்கி வாகனங்களில் செல்லும் இம்ரான் கான் ஆதரவாளா்கள்.
Updated on

பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாதில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் பேரணியாகச் சென்றனா்.

முன்னதாக, அடிலாலா சிறையில் இம்ரான் கானை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவா்கள், பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்து போராட்டம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தனா்.

பின்னா் கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் அலி அமீன் கண்டாபுா் தலைமையில் இஸ்லாமாதை நோக்கி அவா்கள் பேரணியாகச் சென்றனா்.

முன்னனதாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகவும், மக்கள் தீா்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிவரும் இம்ரான் கான், அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) ‘இறுதிக்கட்ட’ போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தாா்.

இருந்தாலும் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டது. இஸ்லாமாபாதில் நவ. 18 முதலே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் கீழ், அந்த நகருக்குள் நுழைய முயலும் போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனா்.

போராட்டக்காரா்களை தடுக்கும் வகையில் லாகூா், ராவல்பிண்டி, பெஷாவா் இடையிலான ரயில் சேவையை பாகிஸ்தான் ரயில்வே துறை ரத்து செய்தது. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி இடையே மெட்ரோ பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

பல்வேறு ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com