இலங்கை: வெள்ளத்தில் சிக்கிய 6 பள்ளிக் குழந்தைகள் மாயம்!

வெள்ளத்தில் டிராக்டர் சிக்கியதால், அதில் பயணித்த குழந்தைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இலங்கையில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாயமான 6 குழந்தைகள் தேடப்பட்டு வருகின்றனர்.

வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான வானிலை நிலவுவதால், இது இலங்கைக்கு அருகில் சென்று வியாழக்கிழமை (நவ. 28) சூறாவளி புயலாக தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நிலவி வரும் மோசமான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரைதிவு நகர் அருகே செவ்வாய்க்கிழமை (நவ. 26) மாலையில் பள்ளிக் குழந்தைகள் 11 பேரை ஏற்றி வந்த டிராக்டரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளில் 5 பேர் மீட்கப்பட்டு விட்டனர். இருப்பினும், அவர்களுடன் சென்ற 6 குழந்தைகளும், டிராக்டர் ஓட்டுநரும், உடன்சென்ற மற்றொருவரும் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்கரை பகுதியில் சூறாவளிக் காற்று
இலங்கை கடற்கரை பகுதியில் சூறாவளிக் காற்றுAP

மேலும், பதுல்லாவில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். வானிலை தொடர்பான பல்வேறு விபத்துகளில் 8 பேர் காயமடைந்ததாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதன்கிழமை (நவ. 27) நிலவரப்படி, கிட்டத்தட்ட 600 வீடுகள் சேதமடைந்ததால், 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் சில பகுதிகளில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மே மாதத்திலிருந்து கடுமையான வானிலையால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இயற்கை சீற்ற விபத்துகளும் நிகழ்கின்றன. ஜூன் மாதத்தில் வெள்ளம், மண்சரிவு காரணமாக 16 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com