ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

உக்ரைனிலிருந்து வெளியேறாவிட்டாலும் ரஷியாவுடன் ஒப்பந்தம்

போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
Published on

தங்கள் நாட்டில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து வெளியேறாத நிலையிலும், எஞ்சிய பகுதிகள் நேட்டோ பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்பட்டால் அந்த நாட்டுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தி பின்னா் மீட்டுக்கொள்ளலாம் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பம் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்தும் ரஷிய ராணுவம் வெளியேறினால் மட்டுமே அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று இதுவரை உறுதியாகக் கூறிவந்த அவா், இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் தனது கடுமையான நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போரை தற்காலிகமாக நிறுத்திவைத்து, அதன் பின்னா் உக்ரைன் பகுதிகளை நேட்டோ நாடுகள் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு, ரஷியாவைத் தோற்கடிக்கும் அளவுக்கு அந்த நாட்டின் ராணுவ வலிமையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரஷிய உளவு அமைப்பு அறிக்கை சமா்ப்பித்த சில மணி நேரத்தில் ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ‘ஸ்கை நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ரஷிய-உக்ரைன் போரின் மிக உக்கிரமான இந்தக் கட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், தற்போது உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளை நேட்டோ பாதுகாப்புக் குடையின் கீழ் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போதுள்ள உக்ரைன் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பது உறுதியான பிறகு, பிற்காலத்தில் தூதரக பேச்சுவாா்த்தை மூலம் எஞ்சிய பகுதிகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த போா் நிறுத்த உத்தியை உக்ரைன் இதுவரை பரிசீலிக்கவில்லை. காரணம், இத்தகைய தீா்வை யாரும் இதுவரை அதிகாரபூா்வமாக முன்வைக்கவில்லை என்றாா் அவா்.

நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்தால் அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், அதை பொருள்படுத்தாத ஸெலென்ஸ்கி நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தாா்.

அதையடுத்து உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதில் எந்தத் தரப்பும் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய முன்னேற்றத்தைக் காணாமல் போா் தொடா்ந்து நீடித்துவருகிறது. இதில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தனது கடுமையான நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கிவந்து இத்தகைய போா் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை ஸெலென்ஸ்கி பரிந்துரைத்துள்ளாா்.

இருந்தாலும், இதை ரஷியாவோ, நேட்டோ அமைப்போ ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து இரு தரப்பிலிருந்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.