
இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
இரு தரப்பினருக்கும் அண்மைக் காலமாக நடந்துவரும் மோதலில், ஹிஸ்புல்லாக்கள் நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய இஸ்ரேலின் பின்யாமினா நகருக்கு அருகே உள்ள ராணுவ தளத்தின் மீது லெபனானில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நான்கு இஸ்ரேல் படையினர் உயிரிழந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெய்ரூட்டில் இஸ்ரேல் படையினர் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பதிலடியாகவே அந்த நாட்டு கோலானி படைப் பிரிவைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் தாக்குதலில் மேலும் 61 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பு கூறியது.
காஸாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக். 7 ஆம் தேதி போர் தொடங்கியது. அதிலிருந்து, லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற மற்றோர் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகளில் தாக்குதல் நடத்துவதும், அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்துவதும் தொடர்ந்து வருகிறது.
இந்தச் சூழலில், ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு அஞ்சி தங்கள் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களைத் திரும்ப அழைத்துவருவது, தங்கள் நாட்டையொட்டிய எல்லைப் பகுதிகளிலிருந்து ஹிஸ்புல்லாக்களை விரட்டியடிப்பது ஆகியவை காஸா போரின் புதிய இலக்குகள் என்று இஸ்ரேல் கடந்த மாதம் அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, ஆயிரக்கணக்கான பேஜர் மற்றும் பிற மின் சாதனங்களில் முன்கூட்டியே மறைத்துவைத்திருந்த சிறிய வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து லெபனானில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலும் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனானில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்திவருகிறது.
கடந்த மாதம் 23ஆம் தேதியிலிருந்து லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா மற்றும் முக்கிய தளபதிகள் உள்பட 2,306-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் தாக்குதலில் நான்கு இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக சக்திவாய்ந்த வான்பாதுகாப்பு தளவாடங்களில் ஒன்றாக அறியப்படும் இஸ்ரேலின் "அயர்ன் டோமையும்' மீறி அந்த நாட்டு ராணுவ நிலை மீது ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தி உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இது எப்படி சாத்தியமானது என்பதற்கான விளக்கத்தையும் அவர்கள் அளித்துள்ளனர். பின்யாமினா நகருக்கு அருகே உள்ள ராணுவ தளத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, இஸ்ரேலின் வான்பாதுகாப்பு தளவாடங்களை திசைதிருப்புவதற்காக ஏராளமான ஏவுகணைகளை தாங்கள் வீசியதாக அவர்கள் கூறினர்.
அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் அயர்ன் டோம் வான்பாதுகாப்பு தளவாடங்களின் முழு கவனம் இருந்தபோது ராணுவ நிலை மீது ட்ரோன்களை ஏவியதால் அவை இடையூறு இல்லாமல் இலக்கைத் தாக்கின என்று ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்தனர்.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,289 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது:
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 பேர் உயிரிழந்தனர்; 220 பேர் காயமடைந்தனர். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,289 ஆக அதிகரித்துள்ளது.
இது தவிர, இஸ்ரேல் இதுவரை 98,684 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.