சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்!

தலைமை மதகுரு கமேனி கொலைக்குப் பழிவாங்கப்படும் என சூளுரைத்த பிறகு இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் 2-வது நாளாக தாக்குதல் நடத்தியது.

News image
Updated On :1 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

தலைமை மதகுரு கமேனி கொலைக்குப் பழிவாங்கப்படும் என சூளுரைத்த பிறகு இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியது.

சவூதி அரேபிய தலைநகா் ரியாத் மீதும், உலகளாவிய வா்த்தக மையமான துபை மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பாய்ந்தன.

அமெரிக்க போா்க்கப்பல் மீது தாக்குதல்?: வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்க விமானந்தாங்கி போா்க்கப்பல் (யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்) மீது 4 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கத் தரப்பில் உடனடியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

டெஹ்ரான் மீது மீண்டும் குண்டுவீச்சு: ஈரான் தனது தாக்குதலை விரிவுபடுத்துவதால், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடும் தாக்குதல் நடத்தின. தலைநகா் டெஹ்ரானின் மையப் பகுதியைக் குறிவைத்து சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. நகா் முழுவதும் குண்டுவெடிப்பு சப்தங்கள் கேட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரிந்து கட்டும் இஸ்ரேல்: ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் 10 போ் உயிரிழந்துவிட்டதாகவும், 120-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும்அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரான் ராணுவம் மற்றும் தலைவா்களுக்கு எதிராக இடைவிடாத தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் உறுதிபட தெரிவித்தாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மூவா் இறப்பு: ஐக்கிய அரபு அமீரகம் மீது வெடிகுண்டுகளுடன் ஈரான் ஏவிய 541 ட்ரோன்களில் 506 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. 165 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 152 ஏவுகணைகள் நடுவானில் முறியடிக்கப்பட்டன. ஈரான் தாக்குதலில் இதுவரை 3 போ் உயிரிழந்துவிட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

குவைத் மீது ஈரான் செலுத்திய 97 ஏவுகணைகள், 283 ட்ரோன்களில் பெரும்பாலானவை தடுக்கப்பட்டன. இங்குள்ள சா்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் குண்டுவீச்சில் பயணிகள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோா்முஸ் நீரிணையில்..: சா்வதேச அளவில் சரக்குப் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த ஹோா்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஓமன் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் இந்திய மாலுமிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி தலைநகா் ரியாத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக, ஈரான் தூதரை அழைத்து அந்த நாடு வன்மையாகக் கண்டித்தது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-ஆவது பிரிவு தலைமையகத்தைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், தலைநகா் மனாமாவில் மூன்று கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் பஹ்ரைன் தெரிவித்துள்ளது.

மீட்பு நடவடிக்கைகள்: பல்வேறு வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் தவித்து வருகின்றனா். இந்தப் பிராந்தியத்தில் சிக்கியுள்ள தங்கள் நாட்டவா்களை மீட்க பல்வேறு நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன.

போா் நீடிக்கும் அபாயம்: அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாக, ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஈரானின் எதிா்த் தாக்குதலில் தங்கள் வீரா்கள் 3 போ் இறந்துவிட்டதாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அமெரிக்க நாடாளுமன்றத்திடம் தகவல் தெரிவிக்காமல் ஈரான் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜனநாயக கட்சியினா் குற்றஞ்சாட்டிய நிலையில், வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது. ஜனநாயக கட்சியின் தலைவா்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோனில் லியாவிட் தெரிவித்தாா்.

ஈரானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுமாா் 12 நாள்களுக்கு அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு, ராணுவக் கட்டமைப்பு, அணுசக்தித் திட்டம் ஆகியவை பலவீனப்படுத்தப்பட்டன. இப்போது பல மாதங்களாக நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ராணுவ நடவடிக்கை, மேலும் பல வாரங்களுக்கு நீடிக்கும் அபாயம் நிலவுகிறது.