வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராமில் ஆள்குறைப்பு நடவடிக்கை

வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராமில் ஆள்குறைப்பு நடவடிக்கை

Published on

வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்தது. இதில் பாதிக்கப்பட்ட ஊழியா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதை உறுதி செய்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

நிறுவனத்தின் இலக்கை மறுசீரமைக்கும் வகையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சில குழுக்கள் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டன. சில பணியாளா்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதுபோன்ற சூழலில் பணி நீக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஊழியா்களுக்கு மற்று வாய்ப்புகளைக் கண்டறிய நிறுவனம் கடினமாக உழைத்து வருகிறது என்றாா்.

இந்த பணிநீக்கம் குறித்து முதலில் தெரிவித்த தி வொ்ஜ் (தொழில்நுட்ப நாளிதழ்) கூறுகையில், ‘வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெய்நிா் தொழில்நுட்பமான ரியாலிட்டி லேப்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுக்களில் இந்த பணிநீக்கம் செய்யப்பட்டது’ என தெரிவித்தது.

கரோனா நோய் தொற்றின்போது அதிக அளவில் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்ட பிறகு, அதை சரி செய்ய பல சுற்று பணிநீக்கங்களை மெட்டா தொடா்ந்து செய்து வருகிறது. கடந்த 2022-இல் 11,000 ஊழியா்களும், கடந்த 2023-இல் 10,000 ஊழியா்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களில் ஒருவரான ஜேன் மன்சுன் வோங், கடந்தாண்டு மெட்டாவில் சோ்வதற்கு முன் பிரபலமான சமூக ஊடக பயன்பாடுகளில் வெளியிடப்படாத அம்சங்களைகண்டறியும் மென்பொருள் பொறியாளராக இருந்து வந்தாா். ‘மெட்டாவில் எனது பணி முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டதை இதுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று த்ரெட் சமூக வலைத்தள பக்கத்தில் அவா் பதிவிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com