ஜப்பான் தேர்தல் - பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி!

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாAP
Published on
Updated on
1 min read

ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

ஜப்பான் பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, ஷிகெரு இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த மாதம் தோ்ந்தெடுத்தது. அதையடுத்து, அவா் நாட்டின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மூன்று எம்.பி.க்கள் பதவி விலகியதால் அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனவே, புதிதாக தோ்தல் நடத்தி தனிப் பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்காக நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த ஷிகெரு இஷிபா முடிவு செய்தாா்.

எனவே, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நேற்று (அக். 27) நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இது, பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆட்சியமைக்க கூட்டணிக்கு வெளியே பிற கட்சிகளின் ஆதரவைத் தேடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ஷிகெரு இஷிபாவின் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த 2009ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பைப் பறிகொடுத்தற்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு, அந்தக் கட்சி சந்தித்திருக்கும் மிக மோசமான தோல்வி இதுவாகும்.

மொத்தமுள்ள 465 இடங்களில் லிபரல் ஜனநாயகக் கூட்டணி 215 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால், பெரும்பான்மை பெறுவதற்கு 233 இடங்கள் தேவை.

லிபரல் ஜனநாயகக் கட்சி கொமெய்டோ கட்சியுடன் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலைச் சந்தித்தது. ஆனால், கொமெய்டோ கட்சித் தலைவர் கெய்ச்சி இஷி தனது சொந்தத் தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். தேர்தலுக்கு முன்னர் இந்தக் கூட்டணியிடம் 288 தொகுதிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில், ஜப்பானின் முக்கிய எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி 148 தொகுதிகளைக் கைப்பற்றியது. கடந்த தேர்தலில் பெற்ற 98 இடங்களை விட கூடுதலாக 50 இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெற்றது.

ஊழல் மற்றும் பணவீக்கம் காரணமாக ஆளும் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்தத் தேர்தல் முடிவு அதைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com