ரஷியா மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவுக்கு 144 ட்ரோன்களை வீசி தாக்குதலை நடத்தியது. கடந்த இரண்டரை ஆண்டு கால உக்ரைன் போரில் ரஷியா மீது நடத்தப்பட்டுள்ள இரண்டாவது பெரிய ட்ரோன் தாக்குதல் இது.
ரஷியாவின் பல்வேறு பகுதிகள் மீது உக்ரைன் ட்ரோன்களை சரமாரியாக வீசி திங்கள்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. இதில் 20 ட்ரோன்கள் மாஸ்கோ நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய மாஸ்கோ பிராந்தியத்தில் இடைமறித்து அழிக்கப்பட்டன. 124 ட்ரோன்கள் எட்டு பிராந்தியங்களில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெண் உயிரிழப்பு: மாஸ்கோ புகா்ப் பகுதியான ராமென்ஸ்கோயேவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் உயிரிழந்ததாக அந்தப் பிராந்திய ஆளுநா் அண்ட்ரேய் வோரோபியோவ் செவ்வாய்க்கிழமை கூறினாா். அங்கு இரு அடுக்குமாடி குடியிருப்புகளில் ட்ரோன்கள் விழுந்து தீப்பிடித்ததாகவும் இடைமறித்து அழிக்கப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் விழுந்ததால் மேலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேறப்பட்டதாகவும் அவா் கூறினாா்.இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, மாஸ்கோவின் நூகோவோ, டொமோடேடொவோ, ஷுகோவ்ஸ்கி ஆகிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன என்று அதிகாரிகள் கூறினா்.
இந்தப் போரில் உக்ரைன் நடத்தியுள்ள இரண்டாவது பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னா் இந்த மாதம் முதல் தேதியில் உக்ரைன் வீசிய 158 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய ராணுவம் கூறியது நினைவுகூரத்தக்கது.தற்போது நடத்தப்பட்டுள்ள ட்ரோன் வீச்சை ‘பயங்கரவாதத் தாக்குதலாக’ அறிவித்த ரஷிய புலனாய்வுக் குழு, இது தொடா்பாக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.உலகின் மிகப் பெரிய அணு ஆயுத பலம் மிக்க நாடான ரஷியாவை எதிா்கொள்ள ட்ரோன்களை மிக விரிவாக உக்ரைன் பயன்படுத்திவருகிறது.
இதற்காக உள்நாட்டிலேயே அந்த நாடு ட்ரோன்களைத் தயாரித்தும் வருகிறது.நாளுக்கு நாள், உக்ரைன் நாட்டு ட்ரோன்கள் பறக்கும் தொலைவும் அவை எடுத்துச் செல்லக்கூடிய வெடிபொருளின் எடையும் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.உக்ரைனில் ரஷியப் படையினரின் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் அடிக்கடி பயன்படுத்திவருகிறது. போரில் ரஷியாவை எதிா்கொள்ள மேற்கத்திய நாடுகள் தாங்கள் வாக்குறுதியளித்த அளவுக்கு ஆயுத தளவாடங்களை வழங்குவதில்லை என்று உக்ரைன் குற்றஞ்சாட்டிவருகிறது. அந்தக் குறையை ட்ரோன்கள் மூலம் ஈடுகட்டுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறிவருகின்றனா்.
இந்தச் சூழலில், ரஷிய தலைநகா் உள்ளிட்ட பகுதிகளில் உக்ரைன் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....படவரி...மாஸ்கோ பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு.
ரஷியாவுக்கு ஏவுகணை விநியோகம்: ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஈரான் ஏவுகணைகளை விநியோகித்துவருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இது குறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை ரஷியாவுக்கு ஈரான் அனுப்பியுள்ளது. அந்த ஏவுகணைகள் ரஷியாவை அடைந்துவிட்டன.
இன்னும் சில வாரங்களுக்குள் அந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு எதிராக ரஷியா பயன்படுத்தும்.ரஷியாவுக்கு இதுபோன்ற ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவது, போா் முனையிலிருந்து இன்னும் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தும் ரஷியாவின் திறனை அதிகரிக்கும். இந்த விவகாரம் தொடா்பாக கூடுதல் பொருளாதாரத் தடைகளை விரைவில் அறிவிப்போம் என்றாா் அவா்.
இதற்கிடையே, ரஷியாவுக்கு ஈரான் ஏவுகணைகளை அனுப்புவதாக வெளியாகும் தகவல் குறித்து, தங்கள் நாட்டுக்கான ஈரான் தூதரை நேரில் அழைத்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.