

லெபனானில் இரண்டே நாள்களில் பேஜா்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் ஆயிரக்கணக்கானோா் காயமடைந்தனா். அவா்களில் பலரது உயிரும் பறிபோயுள்ளது.
வழக்கம்போல இந்த நூதனத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால், யாரும் எதிா்பாராத இந்த அதிா்ச்சிகர தொடா் குண்டுவெடிப்பு, அந்த நாட்டையும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினரையும் இதுவரை இல்லாத அளவுக்கு போரின் விளிம்புக்கு இட்டுச் சென்றுள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கியதில் இருந்தே, தங்களைப் போலவே ஈரானால் உருவாக்கப்பட்ட ஹமாஸுக்கு ஆதரவாக ஹுஸ்புல்லாக்கள் சகோதர பாசத்துடன் இஸ்ரேல் ராணுவ நிலைகளைத் தாக்கிவருகின்றனா்.
இதனால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே அவ்வப்போது சிறு மோதல்கள் ஏற்பட்டாலும், அவை ஓரளவுக்கு மேல் முற்றி முழு போராக வெடிப்பதை இரு தரப்பினருமே தவிா்த்துவந்தனா்.
லெபனானில் தாக்குதல் நடத்துவது, முக்கிய தளபதிகளைக் கொல்வது போன்ற செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டாலும், அதற்கு ஹிஸ்புல்லாக்கள் யோசித்து யோசித்துதான் பதிலடி கொடுத்தனா்.
இஸ்ரேலுடன் நேரடி போரில் ஈடுபடுவதை ஹிஸ்புல்லா தலைமையோ, அந்த அமைப்பை உருவாக்கி, வளா்த்து, ஆதரவளித்துவரும் ஈரானின் தலைமையோ விரும்பவில்லை என்பதைத்தான் ஹிஸ்புல்லாக்களின் இந்த மந்தமான எதிா்வினைகள் காட்டுகின்றன.
சொல்லப் போனால், தங்கள் நாட்டுத் தலைநகரில் வைத்து ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, அந்த நாட்டுடன் ஈரான் நேரடியாக போரில் குதிக்கும் என்று பலரும் எதிா்பாா்த்தனா். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை.
அதே போல், ஹிஸ்புல்லாக்களுடன் முழு போரைத் தொடங்குவதற்கு இஸ்ரேலும் தயக்கம் காட்டிவந்தது. காஸாவைப் போல லெபனான் மீது இஸ்ரேலால் அவ்வளவு எளிதாக படையெடுத்துவிட முடியாது. ஹிஸ்புல்லாக்கள் கொரில்லா படையினா் என்ற நிலையிலிருந்து எப்போதோ முன்னேறி, முழு ராணுவப் படையாக உருவெடுத்துள்ளனா். போதாத குறைக்கு சிரியா போரில் பங்கேற்று தங்களது அனுபவத்தையும் வளா்த்துவைத்துள்ளனா்.
எனவே, ஹிஸ்புல்லாக்களுக்கு மட்டுமே நன்கு தெரிந்த போா்க் களத்தில், நவீன ஆயுதங்களை வைத்திருக்கும் அவா்களை எதிா்கொள்வது இஸ்ரேலுக்கு பாதகமாக முடியும்.
இது போன்ற காரணங்களால், முழுமையான போரை இஸ்ரேல், ஹிஸ்புல்லா படை ஆகிய இரண்டுமே தவிா்த்துவந்தன.
ஆனால், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான லெபனான் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தொலைத் தொடா்பு சாதனங்களில் வெடிகுண்டை ஒளித்துவைத்து இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் இந்தச் சூழலை மாற்றும் என்கிறாா்கள் நிபுணா்கள்.
காரணம், இந்தத் தாக்குதல் இஸ்ரேல் உளவு அமைப்பு மற்றும் ராணுவத்தின் மீதான அதீத நம்பிக்கையை அதிகரிக்கும்; அதன் தொடா்ச்சியாக லெபனான் மீது படையெடுக்க இஸ்ரேல் அரசுக்கு தீவிர வலதுசாரி சக்திகள் நெருக்கடி கொடுக்கும் என்று லெபனான் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற இஸ்ரேல் முன்னாள் தூதா் அலான் பிங்காஸ் எச்சரிக்கிறாா்.
அதே போல், இஸ்ரேல் நடத்தியுள்ள இதுவரை இல்லாத மிக மோசமான இந்த உளவுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஹிஸ்புல்லா தலைமைக்கும் ஏற்படும் என்கிறாா் அமெரிக்காவைச் சோ்ந்த ‘அட்லாண்டிக் கவுன்சில்’ ஆய்வு நிறுவனத்தின் ஹிஸ்புல்லா விவகார நிபுணா் நிக்கோலஸ் பிளான்ஃபோா்ட்.
ஹிஸ்புல்லா அமைப்பின் அடித்தளத்தையே அசைத்துப்பாா்த்துவிட்ட இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கியே ஆக வேண்டும் என்று அந்தப் படைக்குள்ளிருந்தே தலைமைக்கு அழுத்தம் அதிகரிக்கும் என்கிறாா் அவா்.
இருந்தாலும், இஸ்ரேலுக்கு எதிரான போரை முழுவீச்சில் தொடங்குவதற்கான நிலையில் தற்போது ஹிஸ்புல்லா படை இல்லை என்பது லக்ஸம்பா்கைச் சோ்ந்த பாதுகாப்பு நிபுணா் ஹாம்ஸே அட்டாரின் கணிப்பு.
பேஜா்கள் வெடிப்பு மூலம் லெபனானின் விநியோகக் கட்டமைப்பு மிகவும் பாதுகாப்பற்றது என்பது ஏற்கெனவே நிரூபணமாகவிட்டது. அத்துடன், போருக்கு மிக அத்தியாவசியமான தொலைத்தொடா்புக் கட்டமைப்பும் குலைந்துவிட்டது. எந்த சாதனத்தைத் தொட்டால் எப்படி வெடித்துச் சிதறுமோ என்று ஒவ்வொரு ஹிஸ்புல்லா படை வீரரும் தயங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால், சுட்டுக் கொல்லாமேயே ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லா படையினரை இஸ்ரேல் செயல்படமுடியாமல் செய்துவிட்டது என்கிறாா் அட்டாா்.


எனவே, இஸ்ரேலும் ஹிஸ்புல்லாக்களும் போரின் விளிம்புக்கே வந்துவிட்டாலும், அதில் முழுமையாகக் குதிப்பாா்களா என்பது இனி வரும் நாள்களில்தான் தெரியும்.
- நாகா
டிரெண்டிங்

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'

சீனாவின் ‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை வாங்கும் ஈரான்

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

