உக்ரைன் தாக்குதல்: மேலும் ஒரு ரஷிய ஆயுதக் கிடங்கில் தீ
தாங்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் ரஷியாவின் மேலும் ஓா் ஆயுதக் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:
ரஷியா மீதும் ஆக்கிரமிப்பு கிரீமியா தீபகற்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீசி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தினோம்.
இதில், அந்த நாட்டு ஆயுதக் கிடங்கு பற்றி எரிந்தது. இதனால் அந்தக் கிடங்கிலுள்ள ஆயுதங்கள் வெடித்துச் சிதறின என்று அமைச்சகம் தெரிவித்தது.
இந்த் தகவலை ரஷிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினா். டோரோபெட்ஸ் நகருக்கு அருகே ட்ரோன் தாக்குதலில் ஆயுதக் கிடங்கில் தீப்பிடித்ததால் அந்தக் கிடங்கையொட்டி அமைந்துள்ள நெடுஞ்சாலையில் 100 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்தை நிறுத்திவைத்ததாக அதிகாரிகள் கூறினா்.
ஏற்கனவே இதே நெடுஞ்சாலை அருகிலுள்ள மற்றொா் ஆயுதக் கிடங்கில் உக்ரைன் புதன்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்தக் கிடங்கு தீப்பற்றி ஆயுதங்கள் வெடித்துச் சிதறியது நினைவுகூரத்தக்கது.
இது தவிர, தென்மேற்கு ரஷியாவிலும் சனிக்கிழமை நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஆயுதக் கிடங்கு ஒன்று பற்றி எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா மற்றும் கிரீமியா பகுதி மீது வீசப்பட்ட 101 உக்ரைன் ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.
இதில், உக்ரைனின் சுமாா் ஐந்தில் ஒரு பகுதி பிரதேசத்தை ரஷியா கைப்பற்றியது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ஏவுகணைகள், பீரங்கிகள், போா் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை அளித்து உதவிவருகின்றன.
எனினும், உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய படையினருக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே உக்ரைனுக்கு மேலை நாடுகள் ஆயுதங்கள் வழங்குகின்றன.
ரஷியா மீது தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டால், அது உலகின் மிகப் பெரிய அணு ஆயுத சக்தியான அந்த நாட்டுக்கும் தங்களுக்கும் இடையிலான நேரடி போராக உருவெடுக்கும் என்று நேட்டோ நாடுகள் கருதுவதாலேயே இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது.
எனினும், ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் அந்த நாட்டிலுள்ள ராணுவ நிலைகள் மீது மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைக் கொண்டு எல்லை கடந்து தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த நாடுகளை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்திவருகிறாா்.
இருந்தாலும் இதற்கு மேற்கத்திய நாடுகள் இதுவரை சம்மதிக்கவில்லை. அதையடுத்து, சொந்த நாட்டில் உருவாக்கி மேம்படுத்திவரும் ட்ரோன்கள் மூலம் ரஷியாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்திவருகிறது.