இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜிநாமா கடிதத்தை புதிய அதிபர் அநுரகுமார திசாநாயகவுக்கு அனுப்பி வைத்தார். 75 வயதான குணவர்தன, ஜூலை 2022 முதல் இலங்கையின் பிரதமராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் புதிய அதிபர் அநுரகுமாரவின் பதவிப் பிரமாண நிகழ்வுக்கு முன்னதாக அவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றது. தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
எனினும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணி சாா்பில் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) கட்சித் தலைவா் அநுரகுமார திஸ்ஸநாயக ஆகிய மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திஸ்ஸநாயக (56) வெற்றி பெற்றாா். அந்நாட்டின் 9-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளாா்.