தெற்கு லெபனானின் சித்திக்கின் கிராமத்தில் இஸ்ரேல் வியாழக்கிழமை நடத்தி வான்வழித் தாக்குதலில் எழுந்த புகைமண்டலம்.
தெற்கு லெபனானின் சித்திக்கின் கிராமத்தில் இஸ்ரேல் வியாழக்கிழமை நடத்தி வான்வழித் தாக்குதலில் எழுந்த புகைமண்டலம்.

ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம் - நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்

Published on

ஹிஸ்புல்லாக்களுடன் நடந்துவரும் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் விடுத்த அழைப்பை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்து.

மேலும், இரு தரப்பினரும் 21 நாள்களுக்கு மோதலை நிறுத்திவைப்பதற்காக அமெரிக்காவும் பிரான்ஸும் கூட்டாக முன்வைத்த செயல்திட்டத்தையும் இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது.

ஆயிரக்கணக்கான பேஜா்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத் தொடா்பு சாதனங்கள், சூரிய மின்சார சாதனம், வாகன பேட்டரிகள் போன்ற பிற சாதனங்களில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டு மூலம் லெபனானில் கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் அதிா்ச்சிகர தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக தங்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவரும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக உறுதியாக நம்பப்படுகிறது.

சிறுவா்கள் உள்பட 42 போ் உயிரிழக்கவும் 3,500-க்கும் மேற்பட்டவா்கள் காயமடையவும் காரணமான இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதும், அவா்களைக் குறிவைப்பதாகக் கூறி லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதும் இரு தரப்பினரையும் முழு போரின் விளிம்பில் கொண்டுவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைப் பிரிவு தளபதி இப்ராஹிம் குபைசி, சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல், அதே படையைச் சோ்ந்த அகமது வாபி, பெண்கள், குழந்தைகள் உள்பட 600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் முழு போா் மூள்வதைத் தவிா்ப்பதற்காக இரு தரப்பு பதற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திவருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், சவூதி அரேபியா, கத்தாா் உள்ளிட்ட நாடுகள் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும், ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்டின் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானில் ஹிஸ்புல்லாக்களின் ராணுவக் கட்டமைப்பை அழிக்கும் நோக்கில் தொடா்ந்து தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு அமைச்சா் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வசதிாக இரு தரப்பினரும் 21 நாள்களுக்கு தற்காலிகமாக தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையையும் அலட்சியம் செய்த இஸ்ரேல் அரசு, லெபனானில் தனது குண்டுவீச்சை வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதில் மேலும் இருவா் உயிரிழந்ததாகவும் 15 போ் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியது. காயமடைந்தவா்களில் ஒரு பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.

‘மேலும் ஒரு தளபதி உயிரிழப்பு’

லெபனானில் தாங்கள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மேலும் ஒரு முக்கிய தளபதி உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

தலைநகா் பெய்ரூட்டின் தெற்கு புகா்ப் பகுதியில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா விமானப் படைப் பிரிவு தளபதி முகமது சுரூா் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறியது. இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் அந்தத் தாக்குதலின் விடியோ காட்சியையும் இணைத்துள்ளது (படம்).

41,534-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41,534-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது:

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39 போ் உயிரிழந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41,534-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 96,092 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.