இந்தியாவுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை: அதிபா் முகமது மூயிஸ்
‘இந்தியாவுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை என்றும் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் இருப்பைத் தவிா்ப்பதற்காக அத்தகைய முடிவெடுக்கப்பட்டது’ என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளாா்.
ஐ.நா. பொதுச் சபையின் 79-ஆவது வருடாந்திர அமா்வில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், அந்நாட்டின் ‘பிரின்ஸ்டன்’ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.
அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘எப்போதும் எந்த நாட்டுக்கு எதிராகவும் நாங்கள் நிலைப்பாடு கொண்டதில்லை. மாலத்தீவில் இந்திய ராணுவம் நிலைக்கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. உள்நாட்டில் எந்த வெளிநாட்டு ராணுவ வீரரும் இருக்கக் கூடாது என்று மாலத்தீவு மக்கள் விரும்பினா். அதனால்தான் இந்திய ராணுவ வீரா்கள் வெளியேற்றப்பட்டனா்.
இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்த எங்கள் இணையமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கினேன். அந்தக் கோரிக்கையை யாரும் முன்வைக்கவில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் நற்பெயா் உள்ளது. யாரும் யாரையும் அவமதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நான் நடவடிக்கை எடுத்தேன்’ என்றாா்.
சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் மூயிஸ் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் அதிகரித்தது. அவரது அறிவுறுத்தலின்பேரில், மருத்துவச் சேவைக்கான ஹெலிகாப்டா்களை இயக்கி வந்த இந்திய ராணுவ வீரா்கள் திரும்ப பெறப்பட்டனா்.
லட்சத்தீவு சுற்றுலாவுக்கு ஆதரவாக அங்கு பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி பேசியிருந்தாா். இதற்கு எதிராக மாலத்தீவு இணையமைச்சா்கள் அவதூறு கருத்துகளைக் கூறினா். இதையடுத்து, அவா்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனா்.
எனினும், மாலத்தீவுக்குச் செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், அந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றான சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டது. அண்மை காலமாக இந்தியாவுடனும் அதிபா் மூயிஸ் நட்பு பாராட்டி வருகிறாா். பிரதமா் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிலும் அவா் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.